திருப்பூர் அருகே சாதிக் கொடுமையால் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த  அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த பெண் சமையலர் வேறு பள்ளிக்கு இட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் , கடும் எதிர்ப்பு காரணமாக மீண்டும் அவர்  அதே பள்ளியில் பணியமர்த்தப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ள திருமலைகவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையலர் ஒருவர் பணிநிறைவு பெற்றார். இதனால் ஒச்சம்பாளையம் பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்த பாப்பாள் என்ற அருந்ததியர் இனப் பெண்,  திருமலைகவுண்டன்பாளையம் அரசு பள்ளிக்கு நியமிக்கப்பட்டார். அவர் 16-ந்தேதி பணிக்கு வந்தார்.

பாப்பாள் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சமையல் செய்யக் கூடாது என்றும், அவர் சமையல் செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்றும் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் சிலர் பள்ளிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவரை சாதி பெயரை சொல்லி திட்டியதுடன், சமையல் பாத்திரங்களை தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாப்பாள் மீண்டும் ஒச்சம்பாளையம் பள்ளிக்கே செல்லும்படி உத்தரவிடப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தீண்டாமை ஒழிப்பு கூட்டமைப்பு சார்பில் பாப்பாளுக்கு ஆதரவாக சேவூர் கைகாட்டி பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் திருமலைகவுண்டன்பாளையம் வந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முடிவில், பாப்பாள் மீண்டும் திருமலைகவுண்டன்பாளையம் பள்ளியிலேயே பணியாற்ற அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஒச்சம்பாளையம் பள்ளிக்கு சென்று பணியாற்ற வேண்டும் என்று பாப்பாளுக்கு போடப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது. தீண்டாமை ஒழிப்புக்கான கூட்டமைப்பினர் நேற்று இரவு வரை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பாப்பாளை சாதிப்பெயர் சொல்லி திட்டியதுடன், சமையல் பாத்திரங்களை தூக்கி எறிந்த 12 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

21 ஆம் நூற்றாண்டில் இன்னும் தீண்டாமை கொடுமை நிகழ்வது ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளிப்பதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இது போன்ற முட்டாள்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.