சட்டத்தை இப்படி கையில் எடுக்கலாமா? ஜெயக்குமார் நடந்துகொண்டது முற்றிலும் மனித உரிமை மீறல் என பலரும் சமூகவலைதளத்தில் கொதித்தெழுந்தனர். இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை போலீசார் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அன்று திமுக பிரமுகர் ஒருவரை அடித்து அரை நிர்வாணமாக இழுத்து சென்ற சம்பவத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடி கலகம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் பெரும் 60. 70 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் அனைத்தும் ஜனவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பெரும்பாலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தாலும் ஒரு சில இடங்களில் சிறு சிறு பூசல்கள் ஏற்பட்டதால் அந்த இடங்களுக்கு மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் 7 வார்டுகள் உட்பட தமிழகத்தில் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

முன்னதாக 19ஆம் தேதி சென்னை ராயபுரம் பகுதியில் 49வது வார்டு மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து கொண்டிருந்தனர். ஏற்கனவே திமுக கோவை சென்னை போன்ற பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்த நிலையில், ஆளுங்கட்சியினர் யாரும் கள்ள வாக்குகளை செலுத்தி விடக்கூடாது என்பதிலும் அதை தடுப்பதிலும் முனைப்புக் காட்டி வந்தனர். அதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு முன்பாகவும் கள்ள ஓட்டு மற்றும் பூத் கைப்பற்றுதல் போன்றவற்றை தடுக்கும் முயற்சியில் ஏராளமான அதிமுகவினர் திரண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒரு நபரை ஏற்கனவே வேறு ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, மீண்டும் கள்ள ஒட்டு செலுத்த வந்ததாக கூறி சுற்றிவளைத்தனர்.

இந்த தகவல் தெரிந்து அந்த இடத்திற்கு விரைந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அந்த நபரிடம் வாக்குவாதம் செய்ததுடன், அந்த நபரின் கைகளை கட்டுமாறு கூறினார். சிலர் தொண்டர்கள் அந்த நபரை தாக்க முயன்றபோது யாரும் அவரைத் தாக்க வேண்டாம், சட்டையை கழட்டி கையை மட்டும் கட்டுங்கள் என கூறிய ஜெயக்குமார் வேறு வார்டை சேர்ந்த உனக்கு இங்கு என்னடா.. வேலை? திமுகவைச் சேர்ந்த நீ எத்தனை கள்ளஓட்டுகளை போட்டாய் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அந்த நபரை கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து, அரை நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து சென்றார். இதுதொடர்பான வீடியோ நமது சமூக வலைதளத்தில் வைரலானது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த நடவடிக்கைக்கு கடும் விமர்சனத்துக்குள்ளானது. பிரச்சனையை அமைதியாக கையாண்டு, குறிப்பிட்ட நபரை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டிய ஒரு முன்னாள் அமைச்சர் ரவுடியை போல இப்படி நடந்து கொள்ளலாமா?

சட்டத்தை இப்படி கையில் எடுக்கலாமா? ஜெயக்குமார் நடந்துகொண்டது முற்றிலும் மனித உரிமை மீறல் என பலரும் சமூகவலைதளத்தில் கொதித்தெழுந்தனர். இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை போலீசார் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். திமுக பிரமுகர் ஒருவரை அடித்து அரை நிர்வாணமாக இழுத்து சென்ற செயலுக்காக ஜெயகுமார் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடி கலகம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.