Asianet News TamilAsianet News Tamil

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

case against 18 MLAs including MK Stalin...Order issued by the Chennai High Court
Author
Chennai, First Published Apr 19, 2021, 2:49 PM IST

பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2017 ம் ஆண்டு சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு, உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது.  உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்ததுடன், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

case against 18 MLAs including MK Stalin...Order issued by the Chennai High Court

இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடிய உரிமைக் குழு, மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதி புஷ்பா சத்தியநாராயண தீர்ப்பை எதிர்த்து  சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக் குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

case against 18 MLAs including MK Stalin...Order issued by the Chennai High Court
 
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் மஞ்சுளா அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உரிமைக்குழு நீடிக்கிறதா என்று கேள்வியை முன்வைத்தனர். அதற்கு சட்டப்பேரவை செயலாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இதே அரசு அமைந்தால் நீடிக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்கும்படி,   திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கும்,  பாஜகவில் இணைந்த கு.க.செல்வத்துக்கும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios