புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றினார். அம்மா அவர்கள் நம்மை விட்டுப் பிரியாமல் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் இந்நேரம் அனைவரும் விடுதலை பெற்றிருப்பார்கள். ஆனால் திமுகவினர் இடம் நாம் எந்த நல்லவற்றையும் எதிர்பார்க்க முடியாது.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இருந்திருந்தால் பேரறிவாளன் உள்ளிட்டோர் எப்போதோ விடுதலை பெற்றிருப்பார்கள் என சசிகலா கூறியுள்ளார். ஆனால் திமுகவிடம் எந்த நல்லதையும் எதிர்பார்க்க முடியாது அவர்கள் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றிக் கொள்வதிலேயே முழுநேரமும் கவனமாக இருக்கின்றனர் என்று சசிகலா விமர்சித்துள்ளார். பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைத்திருப்பதை வரவேற்று சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் 7 பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். இதில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு அவருக்கு பரோல் நீடித்து வந்த நிலையில் ஜாமின் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை முழுவதுமாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016ம் ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்பின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் கொடுக்கக்கூடாது என மத்திய அரசு வாதாடியது. தமிழ்நாடு அரசு சார்பாக ராகேஷ் திவேதி, தண்டனை கைதியான பேரறிவாளன் ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறார்.

மாநில அரசுக்கு அதிகாரம்:
சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதியை விடுவிக்கும் சக்தி குடியரசு தலைவருக்கு கிடையாது. மாநில அரசுக்கே உள்ளது. ஆயுள் தண்டனை பெற்ற கோட்சே மாற்றும் அவரது சகோதரர் 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் கோட்சே போல் இல்லாமல் பேரறிவாளர் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். இவரை விடுவிக்கும் அதிகாரம் முழுக்க முழுக்க மாநில அரசின் கீழ் வருகிறது. மாநில அரசு நினைத்தால் இவரை விடுவிக்க முடியும், ஆயுள் தண்டனை கைதிகளை போல இவருக்கு மன்னிப்பு வழங்க முடியும் என வாதத்தை முன் வைத்தார். அதை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பேரறிவாளன் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது என்றும் அனைவரும் விடுதலை பெற ஆண்டவன் அருள் புரிய வேண்டும் என்றும் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா இருந்திருந்தால்:
அந்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- பேரறிவாளன் அவர்களுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கி இருப்பது நமக்கெல்லாம் ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தியாக இருக்கிறது. பேரறிவாளன் அவர்கள் நெடுங்காலமாக தொடர்ந்து நடத்தி வந்த சட்ட போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக இது அமைந்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் விரைவில் விடுதலையாக வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமாக உள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றினார். அம்மா அவர்கள் நம்மை விட்டுப் பிரியாமல் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் இந்நேரம் அனைவரும் விடுதலை பெற்றிருப்பார்கள். ஆனால் திமுகவினர் இடம் நாம் எந்த நல்லவற்றையும் எதிர்பார்க்க முடியாது.

அவர்களுடைய கவனம் முழுவதும் தற்போது மக்கள் நலப்பணிகளில் இல்லை என்றும் அவரவர் சொந்த விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றிக் கொள்வதிலேயே முழு நேரமும் ஈடுபடுவதாகவும் மக்கள் கருதுகிறார்கள் ஆனால் கடவுள் கண்டிப்பாக கைவிடமாட்டார் ஆண்டவனின் கருணையால் விரைவில் இதில் ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட்டு அனைவரும் விடுதலை பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.
