சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொது செயலாளர் சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு வசதிகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றிய டிஐஜி ரூபா, கடந்த சில தினங்களுக்கு முன்பு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும், அதற்காக டிஜிபி சத்யநாராயணா 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் கூறியிருந்தார்.

ரூபாவின் இந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பரப்பன அக்ரஹாரா சிறை குறித்து ரூபா தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து தனிக்குழு அமைத்து விசாரிக்க அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். இதையடுத்து, தனிக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, பெங்களூரு சிட்டியின் போக்குவரத்து ஆணையராக மாற்றப்பட்டார். அதேபோல், ரூபாவின் புகாருக்கு ஆளான டிஜிபி சத்தியநாராயணாவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை என்று சசிகலா ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு, வழங்கப்பட்ட சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று வரை இட்லி, தோசை சாப்பிட்டு வந்த அவருக்கு இன்று மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவதுபோல் எலுமிச்சை சாதமும், தேநீரும் அளிக்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது உணவு விஷயத்தில் நிலைமை மாறியிருந்தாலும், சீருடை விஷயத்தில் சசிகலா விரும்பியபடியே ஆடை அணிய சிறைத்துறை அதிகாரிகள் அனுமதித்துள்ளதாக தெரிகிறது.

சிறை வளாகத்தில் இருந்த கேபிள் டிவி இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்க வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபாவின் குற்றச்சாட்டுக்குப் பிறகு சசிகலா தன் அறையை விட்டு வெளியே வரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.