8ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. காரணம் கடந்த காலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் நிலவரம் இந்த சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.    

கருணாநிதி மறைவடைந்ததால் அவரது திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் நடைபெறும் தேர்தல் என்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில் தேர்தல் அறிவிப்புக்கும் வாக்குப்பதிவுக்குமான கால இடைவெளி குறைந்த பட்சம் ஒன்றரை மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரை இருக்கும். ஆனால், திருவாரூர் இடைத்தேர்தல் தேதிப்படி வெறும் 28 நாட்களிலேயே இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது இதுதான் முதல் முறை.

இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தாகவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு நிவாரணப் பணிகளுக்காக ரூ.1,146 கோடியை ஒதுக்கி இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் ஆளையம் திருவாரூர் இடைத்தேர்தலையும் அறிவித்து இருக்கிறது. கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படுவது நிச்சயமாக நிவாரணப்பணிகளை பாதிக்கும்.

நிவாரணப்பணிகளைக் காரணம் காட்டி திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி தமிழக அரசு நீதிமன்றத்தை நாடினாலும் தள்ளி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து திருப்பரங்குன்றத்தை போலவே வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுவதற்கன சாத்தியம் இருக்கிறது.


 
மக்களவை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் இப்போது திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படுவதால் மக்களின் வரிப்பணம்தான் விரயமாகும் என்றும், மக்களவை தேர்தலுடன் சேர்த்து திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய 20 தொகுதிகளுக்கான தேர்தலையும் நடத்தக் கோரி பொது நல வழக்கு தொடுக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்படி நடக்குமானால் திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறி.

முந்தைய தேர்தல் நிலவரப்படி அதிக அளவில் பணப் பட்டுவாடா நடந்ததாகப் புகார் எழுந்ததால், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதேபோல பணப்பட்டுவாடா நடந்ததாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்றது. திருவாரூர் தேர்தல் அனைத்துக் கட்சிகளுக்குமான அக்னிப்பரீட்சை என்பதால் பணபலத்தை இறக்கி புஜபலத்தை காட்ட கட்டாயம் முயற்சிக்கும். ஆகையால் பணப்பட்டுவாடா நடக்கும் புகார் எழுந்தாலும் திருவாரூர் தேர்தல் ரத்தாக வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.