ஸ்டாலினின் உடல் மற்றும் மன புத்துணர்ச்சியில் ஏதோ பிசிறடிக்கிறது! என்கிறார்கள் அவருக்கு மிக நெருக்கமான தி.மு.க. புள்ளிகள்.
என்ன விவகாரம்?...

கருணாநிதி போலவே காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு கழகத்துக்காக உழைப்பதில் ஸ்டாலின் சளைத்ததேயில்லை. காலையில் சென்னை, மதியம் மதுரை, இரவில் குமரியில் உறக்கம் என்று பம்பரமாய் சுற்றி, படாதபாடு பட்டு கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஸ்டாலின் மனம் மற்றும் உடலளவில் சோர்ந்து போய்விட்டார்! என்கிறார்கள் அறிவாலயத்தில் அவருடன் நெருங்கிப் பழகும் உள்வட்டாரத்தை சேர்ந்த தி.மு.க.வினர்.

இது பற்றி விரிவாக பேசுபவர்கள், “மாவட்ட வாரியாக கழகத்தினரை சந்திக்கும் ‘கள ஆய்வு’ பணியை துவக்கியபோது தளபதி பெரும் புத்துணர்ச்சியுடன் இருந்தார். கட்சியினரை சந்தித்து கழகத்தை அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்குமளவுக்கு உயர்த்திக் காட்டும் யோசனைகளை பெற்றும், அறிவுரைகளை வழங்கியும் கலக்கிவிடலாம்! என்று நினைத்தார்.

ஆனால் நடந்து கொண்டிருப்பதோ தலைகீழ். அதாவது தளபதியை சந்திக்கும் ஒவ்வொரு மாவட்ட கட்சியினரும் வண்டி வண்டியாக உட்கட்சி பிரச்னைகளை கொண்டு வந்து குவிக்கிறார்கள். ’கோஷ்டி பிரச்னை, அறிவாலயத்தில் லஞ்ச விளையாட்டு, ஆளுங்கட்சியினரோடு டையப்பில் தி.மு.க. நிர்வாகிகள், தளபதியின் பேச்சை கேட்டு நடக்காத நிர்வாகிகள், கட்சியை வைத்து காசு பார்க்கும் மாவட்ட செயலாளர்கள்.’ என்று உட்கட்சி பிரச்னைகளை கொண்டு வந்து குவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பல பிரச்னைகள் தளபதியால் சரி செய்யப்படும் அளவை தாண்டி மிக மோசமானதாக இருக்கிறது. இதையெல்லாம் கண்டு மனம் நொந்துவிட்டார் தளபதி. உட்கட்சியை ஸ்கேன் செய்து பார்த்தால் இத்தனை நோய் நொடிகளும், ஓட்டை உடைசல்களும் இருக்கிறதே. இதை தட்டி தரம் செய்து ஆட்சியை நம்மால் அடுத்த தேர்தலில் பிடிக்கத்தான் முடியுமா? என்று புலம்பிக் குழம்பியிருக்கிறார்.

இந்த கவலை அவரது மனதோடு சேர்த்து உடம்பையும் பாதித்திருக்கிறது. நன்றாக கவனித்தால் தெரியும் இந்த ஆய்வு துவங்கும் முன்பிருந்த தளபதிக்கும், இப்போது இருக்கும் தளபதிக்கும் நன்றாகவே வித்தியாசம் இருக்கிறது. மனிதர் மிகவும் மனம் நொந்து, நம்பிக்கையின் பிடியை விட்டவராயிருக்கிறார்.

இதை தெரிந்து கொண்டுதான் அக்கா (துர்கா) அவரை ஒரு மாறுதல் காட்டி தேற்றும் விதமாக மலேஷியா பயணத்தை அவசியப்படுத்தினார்.

ஆனால் அங்கு சென்றும் தளபதிக்கு கட்சிக் கவலைதான் ஆட்டிப்படைத்தது.” என்கிறார்கள்.
பாவம்தான் ஸ்டாலின்!