அதிமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று தமிழக அரசியல் களத்தில் பேசப்படுகிறது. அதிமுக அமைச்சர்களை அத்தனை பேரையும் தோற்கடிக்க வேண்டும் என்று திமுக தலைமை முனைப்பு காட்டி வருவதால், அதுபோல நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கேற்றார்போல சென்னையில் பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, “சென்னை ராயபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுகவின் தவறு. வரும் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக போட்டியிட்டு வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.


ராயபுரம் தொகுதி அமைச்ச ஜெயக்குமாரின் தொகுதியாகும். இந்நிலையில் ஆர்.எஸ். பாரதியின் பேச்சு அமைச்சர்கள் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பதையே கோடிட்டுக் காட்டியிருக்கிறது. இதற்கிடையே இதுகுறித்து மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, “அதை ஏற்கத் தயார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரால் முடிந்தால் மதுரையில் போட்டியிடட்டும்” என்று செல்லூர் ராஜூ என்று பதிலடி கொடுத்தார்.