நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக தெரிவித்த அண்ணாமலை, மோடியை எதிர்க்க மம்தா பானர்ஜி, அரவிந்த கெஜ்ரிவால் வரிசையில் ஸ்டாலினும் இணைந்துள்ளதாக கூறியுள்ளார்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை 17 ஆயிரத்துற்கும் மேற்பட்ட இந்தியர்களை ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களை மீட்பதில் மத்திய அரசு பாகுபாடு பார்ப்பதாக கூறி தமிழக அரசு குற்றம்சாட்டியிருந்தது. இதனையடுத்து தமிழக மாணவர்களை விரைவாக மீட்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவானது அமைக்கப்பட்டது. மேலும் தமிழக மாணவர்கள் மீட்கும் நடவடிக்கைக்கு 3.5 கோடி ரூபாயும் தமிழக அரசு ஒதுக்கீடும் செய்தது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது எல்லையை தமிழக அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கடந்த சில நாட்களாக இந்திய விமானப்படையுடன் போட்டியிடக்கூடிய பேருந்துகளும், தங்கள் விருப்பப்படி நாடுகளின் எல்லையை கடக்க முடியும் என்பதையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் காட்டியுள்ளதாக கிண்டல் அடித்துள்ளார். மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க தமிழக அரசு 3.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், எதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இது யாருக்கு என தெரியவில்லையென கூறியுள்ளார்.


இதனையடுத்து தூத்துக்குடியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, தமிழக அரசிடம் தொலை நோக்கு திட்டம் என்று எதுவும் இல்லையென்று தெரிவித்தார், மதுபான விற்பனையை நம்பிதான் தமிழக அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மதுபானங்களின் விலையை உயர்த்தினால் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என நினைத்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அரசை நடத்திவிடலாம் என ஸ்டாலின் நம்பிக்கொண்டு இருப்பதாகவும் இது தான் திராவிட மாடல் வளர்ச்சியா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும் என மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் புறப்பட்டுள்ளதாக கூறினார். அந்த வரிசையில் தற்போது ஸ்டாலினும் இணைந்துள்ளதாக தெரிவித்தார். கோபாலபுரத்தில் பிறந்த காரணத்தால் ஸ்டாலின் பிரதமர் ஆகிவிட முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.