தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு புகழ் எடப்பாடியாரே! நீங்க சட்டம்-ஒழுங்கு பற்றி பேசலாமா? போட்டு தாக்கிய முரசொலி
கடந்த காலத்தைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்ற தைரியத்தில் பழனிசாமி பேசி வருகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு புகழ் பழனிசாமி, சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசலாமா? கொடநாடு கொலை, கொள்ளை புகழ் பழனிசாமி, சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசலாமா? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை புகழ் பழனிசாமி, சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசலாமா?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டதாக கூறிய எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி பேசலாமா? என முரசொலி விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி வெளியிட்டுள்ள செய்தியில்;- கடந்த காலத்தைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்ற தைரியத்தில் பழனிசாமி பேசி வருகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு புகழ் பழனிசாமி, சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசலாமா? கொடநாடு கொலை, கொள்ளை புகழ் பழனிசாமி, சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசலாமா? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை புகழ் பழனிசாமி, சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசலாமா?
கள்ளக்குறிச்சி சம்பவத்துக்காக தமிழ்நாடு அரசு தலைகுனிய வேண்டுமாம். பழனிசாமி சொல்கிறார். படுத்தபடியே கால்களைத் தேடி ஊர்ந்து கொண்டிருக்கும் பழனிசாமி சொல்கிறார். தான் இப்போது எந்தப் பதவியில் இருக்கிறோம் என்ற தன்னிலை அறியாத பழனிசாமி, சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசலாமா?
கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் - மிகமிக வருத்தத்துக்குரியது. இந்த மரணத்துக்குக் காரணமான உண்மையான சம்பவங்கள் குறித்து விசாரணைகள் நடந்து வருகிறது. பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், பள்ளியின் செயலாளரும் தாளாளரின் மனைவியுமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் யாராவது தொடர்புடையவர்கள் இருந்தால் விரைவில் கைது செய்யப்படுவார்கள். காவல்துறை அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளார். காவல்துறை கண்காணிப்பாளர் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனைக் காரணமாக வைத்து தாக்குதல் நடத்தியவர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும் பலர் தேடப்பட்டுவருகிறார்கள். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். யாரும் தப்ப முடியாது என்ற அளவுக்கு இரும்புக் கரம் கொண்டு இந்த பிரச்சினையை தமிழ்நாடு அரசு அணுகியது.
மருத்துவமனையில் இருந்தபோதும் மனமுடைந்த நிலையில் இதுகுறித்து கவலைப்பட்டார் முதலமைச்சர் அவர்கள். அங்கிருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்தார். சில மணிநேரங்களில் வன்முறையாளர்கள் கட்டுப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டார்கள். இவ்வளவு பெரிய வன்முறையிலும் துப்பாக்கிச் சூடு நடத்தி, பலிகள் எதுவும் இல்லாமல் கைது நடவடிக்கையை காவல்துறை செய்தது. துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரே ஒருவர் கொல்லப்பட்டு இருந்தால் கூட போதும் - அதை வைத்து அரசியல் செய்யலாம் என்ற நப்பாசையில் இருந்தார் பழனிசாமி. அது நடக்கவில்லை என்ற ஆத்திரத்தில் அரசு மீது பாய்கிறார்.
கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது என்பதே தெரியாமல் பழனிசாமி பேட்டிதந்துள்ளார். “இந்தச் சம்பவம் கோபத்தால் நிகழ்ந்தது அல்ல, திட்டமிட்டு நடந்துள்ளது போலத் தெரிவதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதே?’’ என்று பழனி சாமியிடம் கேட்கிறார்கள். “எனக்கு முழு விபரம் தெரியவில்லை. முழுவிபரம் தெரிந்தால் தான் பதில் கூறமுடியும்” என்கிறார் பழனிசாமி. கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது என்பதே தெரியாத பழனிசாமி, அரசைப் பற்றி மட்டும் எப்படி குறைச் சொல்லக் கிளம்புகிறார்?
தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றது பழனிசாமி காலத்தில்தான் நடந்தது. அதைப் பற்றிக் கேட்டபோது, ‘எனக்கு இது தெரியவே தெரியாது’ என்றவர் அவர்தான். ‘டி.வி.யைப் பார்த்துத்தான் உங்களைப் போல தெரிந்துகொண்டேன்’ என்று சொன்னவர் பழனிசாமி. அவர் முதலமைச்சராக இருந்தபோது நடந்ததும் தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது நடப்பதும் தெரியவில்லை. மைக்கை நீட்டினால் வார்த்தை வாந்தி மட்டும் குபுக் குபுக்கென எடுப்பார் எடப்பாடியார்!
சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் மிகமிக முக்கியமானவை. “மறுபிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துவிட்டு வன்முறையில் ஈடுபட்டது ஏன்? ஒவ்வொரு வரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டால் நீதிமன்றம் எதற்கு? திட்டமிட்டு ஒரு கும்பல் ஒருங்கிணைந்த குற்றச் செயலை நடத்தி உள்ளது. அதன் மீது முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை தங்களது முழு அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்” என்று நீதியரசர் உத்தரவிட் டுள்ளார்கள். அந்த அடிப்படையில் கைது நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதன்பிறகு எந்தச் சம்பவமும் இல்லை.
மாணவி மரணத்துக்கு நீதிகேட்டு வந்தவர்கள் ஒரு சிலர்தான் என்பதையும், இந்தச் சம்பவத்தை மதவாத, சாதியவாத சக்திகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதையும், சில கட்சிகள் பின்னணியில் இருந்து இயக்கின என்பதையும் ஊடகங்கள் விரிவாக எழுதி வருகின்றன. ஒரே ஒரு மாணவிக்காக நீதிகேட்டு வந்தவர்கள், அத்தனை மாணவ, மாணவியரின் சான்றிதழ்களையும் கொளுத்துவார்களா? இத்தகைய சதியைத்தான் காவல்துறை அதிகாரிகள் குழு விசாரணை செய்து பாரபட்சம் அற்ற நடவடிக்கையை எடுக்கும்.
மீடியாக்கள் எழுதும் இன்ஸ்டண்ட் தீர்ப்புகளை, ஒரு அரசோ, போலீஸோ உடனடியாக எழுத முடியாது. “நீதிமன்றத்துக்கு இணையாக மீடியா டிரையல் நடத்தி வருகின்றன சேனல்கள்” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் என்.சதீஷ்குமார் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு வேண்டுமானால் பழனிசாமியின் கொக்கரிப்பு பயன்படலாம். இவ்வளவு வாய்கிழியப் பேசும் பழனிசாமி, அந்த மாணவி மரணம் அடையக் காரணமான பள்ளியைப் பற்றியோ, அதன் உரிமையாளரைப் பற்றியோ எந்தக் கருத்தும் சொல்லவில்லையே ஏன்? பழனிசாமி வாயடைத்துக் கிடப்பது ஏன்? மாணவியின் மரணத்துக்குக் காரணமான பள்ளி உரிமையாளரைக் கண்டிக்காதது ஏன்? கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
இவரது ஆட்சியில் இதுபோல நடந்திருந்தால் என்ன செய்திருப்பார்? பொள்ளாச்சி சம்பவம் போல கண்டும் காணாதது போல இருந்திருப்பார். அதுதானே உண்மை? வாய்கிழியப் பேசும் ‘ஸ்மால் மலை’கள் ஏன் அந்தபள்ளியைப் பற்றிப் பேச மறுக்கின்றன? அந்தப் பள்ளியைக் காப்பாற்றுவதற்காக காவல்துறை மீது பழிபோட்டு திசை திருப்பி வருகிறார்கள் இவர்கள். ஆனால் தவறு செய்த அனைத்துத் தரப்பையும் சட்டத்தின் முன் நிறுத்தும் தமிழ்நாடு அரசு என தெரிவிக்கப்பட்டுள்ளது.