நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுள்ள இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டம், வன்முறையாக மாறி உள்ளது. வன்முறையை ஒடுக்க ராணுவம் விரைந்துள்ளது. வதந்திகள் பரப்பப்படுவதை தடுப்பதற்காக, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன.

தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதம் அடைந்தது. 6 போலீஸ் காரர்களும் காயம் அடைந்தனர்.

அமைதியாக போராட்டம் நடத்திய தங்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, வன்முறைக்கு வித்திட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். போலீஸ் தடியடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்தின் முன்பு ஏராளமானவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அசாம் மாநிலத்தில் வன்முறையை ஒடுக்குவதற்காக, கவுகாத்தி, திப்ரூகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது.

கவுகாத்தி மாவட்டத்திலும், திப்ரூகர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்டது. 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இவற்றில் பூடானுக்கு செல்லும் விமானமும் அடங்கும். நீண்ட தூர ரெயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை.

அசாமில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இடதுசாரி கட்சிகள் தர்ணா போராட்டம் நடத்தின.

கடந்த 12-ந் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர். எனவே, துப்பாக்கி சூட்டுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம், மேற்கு வங்காளத்துக்கும் பரவியது. பஸ்கள், ரெயில்கள், ரெயில் நிலையங்களுக்கு வன்முறை கும்பல் தீவைத்தது. குறிப்பாக, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 5 ரெயில்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இதற்கிடையே, நேற்று 3-வது நாளாக வன்முறை நீடித்தது. நடியா, பிர்பும், வடக்கு 24 பர்கானாக்கள், ஹவுரா ஆகிய மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. சில பகுதிகளில் சாலையில் டயர்களை போட்டு எரித்தனர். சாலைகளில் மறியலில் ஈடுபட்டனர். கடைகள் சூறையாடப்பட்டன.

நடியாவில், கல்யாணி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையை முடக்கிய போராட்டக்காரர்கள், குடியுரிமை சட்ட நகல்களை தீயிட்டு கொளுத்தினர். ஹவுரா மாவட்டத்தில் பேரணி நடத்தியவர்கள், மோடி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டம் மல்லிக்பூரில் ரெயில் மறியல் நடந்தது.

மால்டா, முர்ஷிதாபாத், ஹவுரா, வடக்கு 24 பர்கானாக்கள், தெற்கு 24 பர்கானாக்கள், வடக்கு தினாஜ்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, இன்று முதல் 3 நாட்களுக்கு போராட்டம் நடத்த உள்ளார். போராட்டக்காரர்கள், சட்டத்தை கையில் எடுக்காமல் அமைதியாக போராட வேண்டும் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மற்றொரு வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. மணிப்பூர் மாநிலத்திலும் சில பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.vvvvvvvvvvvvvv