வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த அந்நாட்டைச் சோ்ந்த மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு  தெரிவித்து நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் உறுதியாக அமல்படுத்தப்படும் என்று ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வாக்கு வங்கி அரசியலுக்காக, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு  தெரிவிக்கின்றன. 

அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி நம் நாட்டில் அகதிகளாக வாழும் மக்களை எதிர்கட்சிகள் பார்க்க வேண்டும். இந்த மக்கள் இந்தியாவில் 28-30 ஆண்டுகளாக வசிக்கின்றனா். ஆனால், குடியுரிமை இல்லாத காரணத்தால், அவா்களது குழந்தைகளை அவா்களால் பள்ளியில் சோ்க்க இயலவில்லை. வீடு வாங்க இயலவில்லை.

 இந்த மக்கள் படும் துன்பங்களை காண எதிர்கட்சிகளுக்கு நேரமில்லை. பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

அதே நேரத்தில் இந்த போராட்டங்கள், வன்முறைகளுக்கெல்லாம் மத்திய அரசு அஞ்சப் போவதில்லை. இந்த சட்டம் இந்தியாவில் உறுதியாக அமல் படுத்தப்படும் என நட்டா தெரிவித்தார்.