நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை மறைக்க ஒன்றுமில்லை என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சரான வெள்ளகோவில் சாமிநாதனின்  இல்லத் திருமண விழா திருப்பூரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருமணத்தை மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். திமுகவினர் மட்டுமல்லாமல், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இந்தத் திருமண விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவில் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியது ஹைலைட்டானது. மு.க. ஸ்டாலினை பாராட்டி பேசியதை பாஜகவில் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.
இந்த விழாவில் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசும்போது, "கருணாநிதிக்குப் பிறகு யார் என்று வருகிறபோது, மு.க.ஸ்டாலின், தளபதியாக மட்டுமல்லாமல் எங்களையெல்லாம் வீழ்த்திய வெற்றித் தளபதியாகவும் திகழ்கிறார். இதிலிருந்து ஒன்றை நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் இன்னும் கருணாநிதி போல அதிகம் உழைக்க வேண்டும் என்பதுதான் அது” என்று கூறியிருந்தார். பாஜகவை மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துவரும் நிலையிலும், அதற்கு ஹெச். ராஜா, முன்பு பாஜக  தலைவராக இருந்த தமிழிசை ஆகியோர் பதிலடி தந்த நிலையில் சி.பி. ராதாகிருஷ்ணனின் இந்தப் பேச்சு அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பை கிளப்பியது.  
இதுகுறித்து சி.பி.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளிக்கும்போது, “கருணாநிதிக்குப் பிறகு திமுகவின் தலைமையை ஏற்று, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை கோடிட்டுக் காட்டினேன். அவ்வளவுதான்.  நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோற்றதும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதும் உண்மைதான். இதை மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இந்த விஷயத்தில் அரசியலும் இல்லை. இது அரசியல் நாகரிகம் மட்டுமே” என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.