திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சரவணன் முறையிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த சட்டப்பேரவை பொதுதேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் சீனிவேலு வெற்றி பெற்றார். ஆனால் உடல் நலக்குறைவால் அவர் எம்.எல்.ஏ. பதவி ஏற்காமல் இறந்தார். இதையடுத்து 2016-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கே.போஸ், தி.மு.க., சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிட்டனர். இதில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரும் கடந்தாண்டு இறந்தார். 

இதற்கிடையில் ஏ.கே.போஸ் தாக்கல் செய்த ஆவணத்தில் (அ.தி.மு.க., அங்கீகார கடிதத்தில்) இடம் பெற்ற அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா கையெழுத்து போலி எனக்கூறி அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி தி.மு.க., வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்தது. வழக்கு தீர்ப்பு நான்கு மாதங்களுக்கு முன் தள்ளிவைக்கப்பட்டது.  

இந்நிலையில் நேற்று மக்களவை மற்றும் தமிழக இடைத்தேர்தல் தொகுதிக்கு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாஹூ, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றிற்கான இடைத்தேர்தல் தற்போது நடத்தப்படாது என அவர் அறிவித்திருந்தார். 

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சரவணன் முறையிட்டுள்ளார். இதற்கு உயர்நீதிமன்ற தரப்பில் விரைவில் தீர்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.