இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுகவில் மிகப்பெரிய இழுபறி நீடித்து வருகிறது.

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் தான் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளனர். இந்த நான்கு தொகுதிகளில் ஒட்டப்பிடாரம் தவிர மற்ற மூன்று தொகுதிகளிலும் திமுக வலுவான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதிலும் அரவக்குறிச்சி மற்றும் சூலூரில் முன்னாள் அமைச்சர்களான செந்தில் பாலாஜி மற்றும் பொங்கலூர் பழனிசாமி களமிறங்கியுள்ளனர். 

திருப்பரங்குன்றத்திலும் டாக்டர் சரவணனை திமுக களமிறங்கியுள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் நிச்சயம் வென்றால்தான் அதிமுகவின் ஆட்சி தொடரும். இல்லையென்றால் ஆட்சிக்கு ஆபத்து. இதனை தெரிந்து தான் இந்த முறை வேட்பாளர் தேர்வில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று காலை விருப்ப மனுக்கள் பெற்ற நிலையில் மாலையிலேயே நேர்காணலையும் நடத்தி முடித்துள்ளது ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பு. 

திருப்பரங்குன்றம் தொகுதிகள் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளரும் பிரபல பைனான்சியருமான அன்புச்செழியன் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். நேர்காணலிலும் கூட அன்புச்செழியன் பங்கேற்றார். அன்புச் செழியன் மதுரையில் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ வுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால் அவருக்கும் அமைச்சர் உதயகுமாருக்கும் இடையே அவ்வளவு சுமூகமான உறவு இல்லை. 

திருப்பரங்குன்றத்தில் அன்புச்செழியன் இருத்தினால் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்று கூறுகிறார் செல்லூர் ராஜு. ஆனால் உதயகுமாரோ மறைந்த எம்எல்ஏ போஸ் குடும்பத்தில் இருந்து ஒருவரை நிறுத்தினால் வெற்றி உறுதி என்று கூறி வருகிறார். இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில் வேட்பாளரை இறுதி செய்வதில் இழுபறி நிலவுகிறது. 

இதேபோல் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் செய்தி வாசிப்பாளரும் தற்போதைய அதிமுக வின் செய்தி தொடர்பாளருமான நிர்மலா பெரியசாமி மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார். ஆனால் அங்கு தனக்கு வசதியான ஒருவரை நிறுத்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திட்டம் தீட்டி வருகிறார். இதனால் அரவக்குறிச்சியில் பொறுத்தவரையிலும் வேட்பாளர் தேர்வில் முன்னேற்றம் எதுவுமில்லை. 

ஒட்டப்பிடாரம் தனித் தொகுதி என்பதால் அங்கு வேட்பாளரை தேர்வு செய்வது அதிமுகவிற்கு பெரிய பிரச்சனையாக இல்லை. அதேபோல் சூழல் தொகுதிகளும் மறைந்த எம்எல்ஏ கனகராஜன் உறவினர்கள் போட்டியிட வாய்ப்பு கேட்டு உள்ளனர். ஆனால் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனக்கு நெருக்கமான ஒருவரை சூலூரில் களமிறக்க எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இடம் லாபி செய்து வருகிறார்.

இதனால்தான் வேட்பாளர் அறிவிப்பில் அதிமுக தாமதம் செய்து வருகிறது. இன்றைய வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் கூறியுள்ள நிலையில் அதனை எதிர்பார்த்து அதிமுகவினர் காத்திருக்கின்றனர்.