பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரருக்கு காரும் காளைகளுக்கு காங்கேயம் பசுமாடும் பரிசாக வழங்கப்படும் என விழா கமிட்டி அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளது பாலமேடு. இந்த கிராமத்தின் மஞ்சமலை ஆற்றுத் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று தொடங்கியது. காலை 8 மணிக்குத் துவங்கி மாலை 4 மணி வரை 8 சுற்றுக்களாக வீரர்களும் காளைகளும் களமிறங்கி வருகின்றனர். இன்று 651 வீரர்களும் 800 காளைகளும் இதில் பங்கேற்க உள்ளன.

ஒவ்வொரு சுற்றும் ஒரு மணி நேரம் என வரையறுக்கப்ட்டு தலா 75 வீரர்கள் களமிறங்குகின்றனர். போட்டியில் பங்கு பெறும் வீரர்கள், காளை உரிமையாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் அறிக்கையை அடிப்படையில், வீரர்கள் மற்றும் காளை மாட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

காயம்படும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பணியில் உள்ளனர். அவர்களை உடனடியாக அழைத்துச் செல்ல 10 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. காயம்படும் காளைகளை அழைத்துச் செல்ல 2 கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன. வீரர்களுக்கு போக்குவரத்து போலீசார் முன்னிலையில் மது போதை பரிசோதனை, செய்யப்பட்டு, இரத்த அழுத்தம் சீராக உள்ளதா எனவும் , உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா எனவும் சோதனை செய்த பின்னரே வீரர்களுக்கு வரிசை எண்கள் கொண்ட டீ-சர்ட் அணிந்து ஜல்லிக்கட்டு களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக களம் காணும் வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளுக்கு எல்.இ.டி.டி வி , பிரிட்ஜ், தங்கக்காசு, இருசக்கர வாகனங்கள், கட்டில். மெத்தை, சைக்கிள் போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் வெற்றி பெற்று அதிக காளை மாடுகளை பிடிக்கும் வீரருக்கு முதல் பரிசாக வேகன் - ஆர் - காரும் சிறப்பாக விளையாடும் காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக காங்கேயம் பசுமாடும் பரிசாக வழங்கப்பட உள்ளன. 

பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் தென்மண்டல ஐ.ஜி. முருகன், தலைமையில், டிஐஜி ராஜேந்திரன், 3 எஸ்பிக்கள், 7 ADSPக்கள், 32 DSPக்கள், 65 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மதுரை மாவட்ட காவல்துறை பாலமேடு ஜல்லிக்கட்டை முகநூல், யூ டுயூப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக  நேரலை செய்யப்பட்டு வருகிறது.