பத்து விரல் பத்தாது போலிருக்குதே அ.தி.மு.க. உடைந்து உடைந்து உருவாகும் குட்டிக் குட்டி கட்சிகளை எண்ணுறதுக்கு. அந்த வகையில்  நாளை  உருவாகிறது இன்னொரு குட்டிக் கட்சி!

அ.தி.மு.க. எனும் தாய் கோழியிடமிருந்து பிரிந்து... ஓ.பன்னீர்செல்வம் ஒரு தனி அணியை உருவாக்கி ‘தர்மயுத்தம்’ செய்தார், பின் அ.தி.மு.க.வில் இணைந்தாலும்  கூட உள்ளுக்குள்ளேயே தனி அணியாகதான் இயங்கி வருகிறார். இந்நிலையில் தினகரன் தனி கட்சியாக பிரிந்திருக்கிறார், ஜெ.,வின் அண்ணன் மகள் தீபா தனி பேரவையும், தீபாவின் கணவர் மாதவன் தனி அமைப்பும், சசிகலாவின் தம்பி திவாகரன் தனி கட்சியும், இன்னொரு தம்பி பாஸ்கரன் தனி அமைப்பும் என... மார்கழி மாதத்தில் பிள்ளையார் கோவிலில் வழங்கப்படும் சுண்டல் போல் ஆளுக்கு கொஞ்சமாய் அள்ளிக் கொண்டே போகிறார்கள். 

இந்த சூழ்நிலையில்தான் முன்னாள் எம்.எல்.ஏ. கம் எம்.பி.யான கோயமுத்தூரை சேர்ந்த கே.சி.பழனிசாமி வரும் திங்கட்கிழமை (24 டிசம்பர்) அன்று ‘அ.தி.மு.க. தொண்டர் அணி’ எனும் பெயரில் தனி அணி அரசியல் ஆரம்பிக்கப்போகிறார். ஏகப்பட்ட பிஸ்னஸ் உடன் எக்கச்சக்கமாக செட்டிலாகி இருக்கும் இந்த மனிதர் விநோதமான அரசியல்வாதி. பேசிப்பேசி தொண்டர்களை கவர்வது, பணத்தை தண்ணீராய் செலவழித்து அரசியல் செய்வது என்றில்லாமல் ஆவணங்கள், ஆதாரங்கள், வழக்குகள் போன்றவற்றின் அடிப்படையில் அரசியல் செய்து கொண்டிருப்பார். 

பன்னீர் தனி அணியாய் செயல்பட ஆரம்பித்தபோது அவருக்கு பக்க பலமாய் நின்றார். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அ.தி.மு.க.வின் நிர்வாகம் குறித்து பதிவாகியிருக்கும் வழக்குகள் பலவற்றில் இவரது கரங்கள் உள்ளன. அணிகள் இணைப்புக்கு பிறகு, உட்கட்சி தேர்தல் நடத்துவது, பொதுச்செயலாளர் பதவி! போன்றவற்றை மையப்படுத்தி பதிவாகியிருக்கும் வழக்குகளில் கே.சி.பழனிசாமியின்  பங்குகள் பெரிதாய் இருக்கிறது. இந்த மனிதர்தான் இப்போது தனி அணியொன்றை துவக்கி இயங்க இருக்கிறார். 

இந்த அணி திங்கட்கிழமையன்று காலை பதினோறு மணிக்கு சென்னையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்தியபடி தங்களின் இருப்பை வெளிக்காட்ட இருக்கிறதாம். இதில் ஒரு பியூட்டி என்னவென்றால், தான் தனி அணி நடத்தியபோது தனக்கு தூணாக நின்ற கே.சி.பழனிசாமியை, ஆளும் தரப்புடன் இணைந்த பின் சில மாதங்களுக்கு முன் எடப்பாடியுடன் சேர்ந்து கட்டம்கட்டி கட்சியிலிருந்தே தூக்கிவீசிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். 

 அதன் பின் ‘தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளையில் இரண்டு முக்கிய புள்ளிகளுக்கு பங்கு போகிறது.’ என்று போட்டுத் தாக்கி தன் சீற்றத்தை காண்பித்தார்  கே.சி.பி. மீண்டும் தன்னை கட்சியில் இணைப்பார்கள்! என்று நம்பி காத்திருந்தவர், அது நடக்கவில்லையென்பதால் இப்போது நாலு பேருடன் தனி அணியாக செயல்பட துவங்குகிறார். இவரிடம் தொண்டர்கள் ஆர்ப்பரிப்பு இருக்காதுதான், ஆனால் வழக்குகள் ரீதியில் தலைமைக்கு பெரும் குடைச்சல் கொடுப்பார்! என்பதே ஆளும் தரப்பின் எரிச்சல்.