டாஸ்மாக்கை புறக்கணித்து ஸ்ட்ரைக் செய்தால் கண்டிப்பாக அரசாங்கம் ஆடிப்போய்விடும் என்றும் தண்ணீரை நிறுத்தியவர்களின் கை காலும் தானே ஆட ஆரம்பிக்கும் என்றும் பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் கிண்டலாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களால் தமிழகமே கொந்தளித்து காணப்படுகிறது.

இதனிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெறுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐ.பி.எல் போட்டி நடைபெறுவதால், காவிரி மேலாண் வாரியம் அமைக்கும் போராட்டம் இளைஞர்களின் கவனம் திசை திருப்பிவிடும் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி.சேகர், ஐபிஎல் கிரிக்கெட் எதிர்ப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், தண்ணீருக்காக கிரிக்கெட்டை புறக்கணிக்கிறது பலன் தராது என்று கூறியுள்ளார். அதற்கு பதில் காவிரி தண்ணீர் கிடைக்கும் வரை டாஸ்மாக் தண்ணியடிக்க மாட்டோம் என்று ஸ்ட்ரைக் பண்ணலாம் என்றும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

டாஸ்மாக்கை புறக்கணித்து ஸ்ட்ரைக் செய்தால் கண்டிப்பாக அரசாங்கம் ஆடிப்போய்விடும் என்றும் தண்ணியை நிறுத்தியவர்களின் கை காலும் தானே ஆட ஆரம்பிக்கும் என்றும் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழகமே கொந்தளித்துப்போயுள்ள நிலையில், பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் கிண்டல்
தொணியில் பதிவிட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.