காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகம் சார்பிலும் அமைக்க கூடாது என கர்நாடக சார்பிலும் வலியுறுத்தப்படுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசும், மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசும் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் வரும் 9ம் தேதி விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையே மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள் என பல தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.

மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சில போக்குவரத்து சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்தாலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் பேருந்துகளில் பயணிகள் இல்லை. தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக கன்னட அமைப்புகளின் சார்பில் தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் எல்லை மறிப்பு போராட்டம் நடத்தப்படும் என கன்னட அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோருவது கண்டிக்கத்தக்கது. காவிரி ஆறு கர்நாடகாவுக்கு சொந்தமானது. இந்த உரிமையை பறிக்கும் காவிரி மேலாண்மை வாரியத்தை ஒரு போதும் அமைக்க விடமாட்டோம் என கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று எல்லை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழக வாகனங்கள் கர்நாடகாவுக்குள்ளும் கர்நாடக வாகனங்கள் தமிழகத்துக்குள்ளும் இயக்கப்பட அனுமதிக்கப்படவில்லை. இதனால் பல பயணிகள் தவித்து வருகின்றனர்.