சட்டசபை, மக்களவை தேர்தல் என அடுத்தடுத்த தேர்தலை சந்தித்து தேயும் தேதிமுக ஆகி விட்டது விஜயகாந்த் கட்சியில் நிலைமை.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மிக மோசமான தோல்வி அடைந்து கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்தது. இதனால் தேமுதிக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். விஜயகாந்த் உடல்நிலையும், கட்சியின் படுதோல்வியும் தேமுதிகவினரை கவலையில் ஆழ்த்தியது. 

இப்படியே போனால் கட்சி காணாமல் போய்விடும் என்கிற நிலையில் உள்ளாட்சி தேர்தலில் மீண்டு எழுச்சியூட்ட தயாராகி வருகிறார் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா. கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கட்சி தலைமை அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட, பேரூராட்சி, நகராட்சி, ஒன்றிய கிளை நிர்வாகிகளை வரவழைத்து பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒருநாளைக்கு ஒரு மாவட்டம் என இதுவரை கன்னியாகுமரி, தேனி, திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்பு முடிந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். மற்ற தேர்தல்களை விட உள்ளாட்சி தேர்தல் மூலம் கட்சியை வலுப்படுத்த முடியும் என நிர்வாகிகளிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.