சென்னை தேனாம்பேட்டையில் திமுக தலைமை அலுவகமான அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைவராக இருந்த போது தினமும் அலுவகத்திற்கு வந்து கட்சி பணிகளை மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அவரது மறைவிற்கு பிறகு திமுக தலைவரான மு.க.ஸ்டாலினும் கட்சி அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொள்கிறார். தினமும் ஏராளமான கட்சி தொண்டர்கள் அறிவாலயத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று இரவு அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காவல்துறை கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்டு இந்தியில் பேசிய மர்ம நபர் அறிவாலயத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி தொடர்பை துண்டித்தார். இதையடுத்து உஷாரான போலீசார் அறிவாலயத்தில் பாதுகாப்பை பலப்படுத்தினர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வந்தனர்.

இதனிடையே அழைப்பு வந்த எண்ணை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் தியாகராஜ நகரைச் சேர்ந்த கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.