Asianet News TamilAsianet News Tamil

ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி.. தலையில் அடித்து அலறும் கி.வீரமணி..

இந்தியர்களின் தொலைப்பேசி இணைப்புகள் இந்திய அரசு அல்லது வெளிநாட்டு அரசின் கண்காணிப்பில் வந்துள்ளன. இது ஓர் அபாயகரமான அச்சமூட்டும், பண்பாடற்ற திகிலூட்டும் சட்ட மீறல் என்பதில் அய்யமில்லை. உலகின் 14 நாடுகளில் உள்ள தலைவர்கள் உள்பட உளவு பார்க்கப்பட்டுள்ளனராம்.


 

Blood freezing shock .. K. Veeramani screaming .. Criticized about spyware.
Author
Chennai, First Published Jul 23, 2021, 3:19 PM IST

இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்த மென்பொருள்மூலம் உலகின் பல நாடுகளிலும் உளவு பார்க்கப்பட்டுள்ளது - இந்தியாவிலும் ஆயிரம் குடிமக்களின் செல்பேசி இணைப்புகள் உளவு பார்க்கப்பட்டுள்ளது என்பது மிகவும் அதிர்ச்சிக்குரியது - அபாயகரமானது. ஒன்றிய அரசின் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்துவது என்பது போதுமானதல்ல;  உரியவர்களைக் கொண்ட தனி சிறப்பு விசாரணை உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பில் நடத்தி, உண்மைத் தன்மையை வெளியில் கொண்டு வரவேண்டும்   என்றும், ஒன்றிய  அரசு  சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஏறக்குறைய 1000 இந்திய குடிமக்களின் செல்பேசி இணைப்புகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இஸ்ரேல் அரசின் அங்கீகாரத்துடன் செயல்பட்டுவரும் அந்நாட்டு நிறுவனம் (NSO),கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள ‘‘பெகாசஸ் ஸ்பைவேர்’’ (Pegasus Spyware) எனும் உளவுக்  கணினி  மென்பொருளை விற்பனை செய்துள்ளது. இஸ்ரேல் நாட்டு அரசு ஒப்புதலுடன் பிறநாட்டு அரசுகளுக்கு மட்டுமே உளவுக் கணினி மென்பொருளை வழங்குவதை  அந்த இஸ்ரேல் நாட்டு நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

300 இணைப்புகள் சோதனை:

இது குறித்து டோரண்டோ பல்கலைக் கழக குடிமக்கள் குழு (University of Toronto’s Citizens Club) நடத்திய ஆய்வின் மூலம் இந்தியாவில் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள செல்பேசிகளில் 300 இணைப்புகள் சோதனைக்குள்ளாகி உள்ளன என்பதும், 22 தொலைப்பேசிகள் தடயவியல் ஆய்வுக்கு ஆளாகியுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் 10 தொலைப்பேசிகள் பெகாசஸ் உளவுக் கணினிப் பொருளின் தாக்குதலுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 தொலைப்பேசிகள் மீதான கணினித் தாக்குதல் உறுதி செய்யப்படவுள்ளது. இந்த ஆய்வுகளின் முடிவுகள் முழுமையான ஆதாரம் சார்ந்தவை; நம்பகத் தன்மைமிக்கவை. இந்தியர்களின் தொலைப்பேசி இணைப்புகள் இந்திய அரசு அல்லது வெளிநாட்டு அரசின் கண்காணிப்பில் வந்துள்ளன. இது ஓர் அபாயகரமான அச்சமூட்டும், பண்பாடற்ற திகிலூட்டும் சட்ட மீறல் என்பதில் அய்யமில்லை. உலகின் 14 நாடுகளில் உள்ள தலைவர்கள் உள்பட உளவு பார்க்கப்பட்டுள்ளனராம். இந்தியாவில் இப்படிக் கண்காணிக்கப்படும் நிலைகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி, இந்திய தேர்தல் ஆணையத்தின் மேனாள் ஆணையர், தேர்தல் வியூகர் கிஷோர் பிரசாந்த்குமார், பத்திரிகையாளர் எனப் பலர் உள்ளனர்.

அய்போன் வசதியுள்ள செல்பேசியில் நேரடியாக பெகாசஸ் உளவுக் கணினி மென்பொருளை ஏற்றிட முடியும். இதற்கு செல்பேசி வைத்திருப்பவர் அனுமதி தேவையில்லை. உரியவருக்குத் தெரியாமலேயே அறிவு நாணயமற்ற முறையில் ஒழுக்கக்கேடாக உளவுத் தாக்குதலை நடத்திட முடியும். ஒரு வாட்ஸ் அப் அழைப்பினை, கண்காணிப்பிற்கு உள்ளான செல்பேசிக்கு அனுப்பினால் உளவுக் கணினி மென்பொருள் தனது வேலையினைத் தொடங்கிவிடும். செல்பேசி வைத்துள்ளவர் பேசிடுவதையும், செய்தி அனுப்பிடும், பெற்றிடும்  அழைப்புகள் பற்றிய விவரங்கள் முழுவதையும் உளவுக் கணினி மூலம் சேகரித்திட முடியும். இதைவிடப் பேராபத்து எதுவாக இருக்க முடியும்? செல்பேசி பயன்படுத்துபவர் அறியாமலேயே  அவருக்குத் தொடர்பில்லாத சில செய்திகளை அவரது செல்பேசியில் பதிவேற்றிட முடியும் எனக் கூறப்படுகிறது. ஆன்ட்ராய்டு செல்பேசியிலும் இந்த உளவுப் பணியினை நடத்திட முடியும்.

திட்டமிட்டுப் பழிவாங்க வாய்ப்பு: 

பழிவாங்கும் திட்டத்துடன், ஒரு நபருக்கு செல்பேசியில் தடயத்தை ஏற்படுத்தி, அவர்மீது கடுமையான சட்டத்தின்படி நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். இப்படி கணினி பேசி மூலம் உளவுப் பார்க்கப்படுவது - இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தடையிடா தனி நபர் ரகசிய (Rights of Privacy) அடிப்படை உரிமையில் குறுக்கீடு செய்வது, அத்துமீறித் தலையிடுவது,  அநாகரிகமான உரிமை மறுக்கும் மோசமான செயலாகும். இதே நிறுவனம் கணினி மூலம் உளவுப் பார்க்கும் செயல்பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, ஆளும் பா.ஜ.க தரப்பு அப்படிப்பட்ட செயல்கள் எதுவும் நடைபெறவில்லை என  சாமர்த்தியமாகப் பதிலளித்தது. ஆனால், அந்தப் பதிலில் அந்த இஸ்ரேலிய நிறுவனத்திற்கும், இந்திய அரசிற்கும் தொடர்பே கிடையாது என தெரிவிக்கப்படவில்லை. இஸ்ரேலுக்கு இந்தியாவிலிருந்து பயணித்த ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான்! இதுகுறித்து   உரியவர்களைக் கொண்ட தனி சிறப்பு  விசாரணை  உச்சநீதிமன்றத்தினுடைய   கண்காணிப்பில் நடத்தி, உண்மைத் தன்மையை வெளியில் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios