முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் மீதான வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

 

அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது.

 

இந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வெளியிட்டனர்.  

அந்த தீர்ப்பில், நளினி சிதம்பரம் உள்பட 3 பேருக்கு எதிராக கருப்பு பணம் மோசடி சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர வருமான வரித்துறை இயக்குனர் அனுமதி வழங்கியுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதேபோல் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்கிறோம் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.