தென் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறாததால் பாஜகவினர் மன உளைச்சலில் இருப்பதாக மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். 
 நாடாளுமன்றத் தேர்தலில் அசுர பலத்தோடு வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. வட இந்தியாவில் அக்கட்சி பெற்ற அளவுக்கு தென் இந்தியாவில் வெற்றியைப் பெற முடியவில்லை. கர்நாடகாவில் பிரமாண்ட வெற்றி பெற்ற பாஜக, தெலங்கானாவில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடிந்தது. ஆனால், தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அக்கட்சி முழுமையாகத் தோல்வியடைந்தது.
இந்நிலையில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை அக்கட்சி நடத்திவருகிறது. தென் இந்தியாவில் அதிகமாக உறுப்பினர் சேர்க்க அக்கட்சி முன்னுரிமை அளித்துவருகிறது. உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளராக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்றுவரும் உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்ய சவுகான் தமிழகம் வந்தார். கன்னியாகுமரி, மதுரையில் உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்த சவுகான், கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.


“தற்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை ஒரே நாடு என்ற கொள்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை பிரதமர் மோடி செயல்படுத்தி காட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி மாலுமி இல்லாத கப்பலை போல மூழ்கும் நிலையில் உள்ளது. காஷ்மீர் பிரச்னையில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது.  ம.பி.யில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
 ஆட்சிக்கு வந்த பிறகு எதையுமே செய்யாததால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் வெற்றியைத் தந்தனர். இந்தியா முழுவதுமே பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ் நாடு, கேரளாவில் பாஜக வெற்றி பெறவில்லையே என்ற மன உளைச்சல் எங்களுக்கு உள்ளது. அஸ்ஸாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் கட்சிக்கு போதிய உறுப்பினர்கள் இல்லாதபோதும் அங்கெல்லாம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தோம். தமிழ் நாட்டில் அதிக உறுப்பினர்களைச் சேர்த்து ஆட்சியைப் பிடிப்போம்.” என்று சவுகான் பேசினார்.