தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய திருப்புமுனை ஏற்படப் போகிறது என்று  நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். 

கடலூரில் பாஜக சார்பில் வேல் யாத்திரை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகை குஷ்பு பங்கேற்று பேசினார். “மோடி அடிக்கடி திருக்குறள் சொல்கிறார். தமிழகம் வரும்போதெல்லாம் தமிழில் பேசுகிறார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பாஜக பெறும். இதற்கு முன்பு கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு நான் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தபோது போலீஸார் என்னை நடுவழியில் தடுத்து நிறுத்தி கைது செய்தார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இன்று கடலூர் வரும்போது மதுராந்தகம் அருகே விபத்து ஏற்பட்டு தப்பி இங்கே வந்துள்ளேன். இதற்கு முருகனின் அருள்தான் காரணம். என்னுடைய கணவர் சுந்தர்.சி ஒரு முருக பக்தர். அவர் எப்போது வெளியே சென்றாலும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார். இந்த வேல் யாத்திரை ஏன் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த யாத்திரை பாஜகவுக்காகவா? கண்டிப்பாக இல்லை. இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்காகவும்தான். 
பாஜகவைப் பார்த்து எதிரணியினர் பயப்படுகிறார்கள். இந்த வேல் யாத்திரை டிசம்பர் மாதம் 7-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு பெற உள்ளது. அதில் நானும் பங்கேற்பேன். தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய திருப்புமுனை ஏற்படப் போகிறது. அதனை நாம் அனைவரும் பார்க்கப் போகிறோம்” என்று குஷ்பு பேசினார்.