ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தின் 22.28 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. 

அதே போல் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 நிறுவனங்களின் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக செயல்பட்டவர் ப.சிதம்பரம். அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.350 கோடி வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக முறைகேடாக அனுமதி வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் என இருவர் மீதும் தனித்தனியாக மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்கு பதிவு செய்தது.  ஏற்கனவே சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்திக் சிதம்பரம் உட்பட 16 பேர் மீது பாட்டியாலா நீதி மன்றத்தில் சிபிஐ இதற்கு முன்னதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

ஆனால் இவ்வழக்குகள் தொடர்பாக சிபிஐயோ, அமலாக்கத்துறையினரோ தன்னை கைது செய்ய இயலாத வகையில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.  ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமின் மறுத்து உத்தரவிட்ட முக்தா குப்தா அமர்வு, நவம்பர் 25 வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாற உள்ளாதாகவும் கூறப்பட்டது. இந்திராணி முகர்ஜி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர். இவர் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இப்போது இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறும் பட்சத்தில் சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் நிலை உருவாகி உள்ளது. கார்த்திக் சிதமபரம் மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட உள்ளார். இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை பாஜக கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே தற்போது அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.