காவி நிறம் பூசி குடியரசு தினம் கொண்டாட முயற்சிக்கும் பாஜக.. கொதிக்கும் தயாநிதி மாறன்..!
ஒட்டு மொத்தமாக தமிழகம் மீதும், தமிழ்நாட்டின் மீதும் ஒரு எதிர்ப்புணர்வை ஒன்றிய அரசு கொண்டுள்ளது. நாங்கள் எதிர்ப்பு அரசியல் செய்யவில்லை. உரிமை அரசியல் செய்கிறோம். உரிமையை தர மறுப்பதால் குரல் எழுப்புகிறோம் என்றார்
தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலுநாச்சியார், கொடிகாத்த குமரன் ஆகியோருக்கு நாம் கவுரவம் செலுத்துகிறோம். ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டு அவர்கள் காவி நிறம் பூசி குடியரசு தினம் கொண்டாட நினைக்கிறார்கள் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
சென்னை பாரிமுனை டி.என்.பி.எஸ்.சி சாலையில் உள்ள ரத்தன் பஜார் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தயாநிதி மாறன்;- மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவுடன் இணைந்து மக்கள் சேவையே மகேசன் சேவை என பணியாற்றி வருகிறோம்.
சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயை சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிதாக நாடாளுமன்றத்தை கட்டுகிறோம் என யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ஒன்றிய மோடி அரசு செலவு செய்கிறது. இதனை ஆரம்பம் முதலே நாங்கள் கண்டிக்கிறோம். மக்கள் எல்லாம் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. எனவே நாங்கள் 20 கோடியை செலவழிக்க வேண்டாம் என்று கேட்டும் அதற்கு பதிலளிக்காமல், அவர்கள் மிருக பலத்துடன் உள்ளதால் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள்தான் தேச பக்தி உள்ளவர்கள் என்பது போல நடந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலுநாச்சியார், கொடிகாத்த குமரன் ஆகியோருக்கு நாம் கவுரவம் செலுத்துகிறோம். ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டு அவர்கள் காவி நிறம் பூசி குடியரசு தினம் கொண்டாட நினைக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக தமிழகம் மீதும், தமிழ்நாட்டின் மீதும் ஒரு எதிர்ப்புணர்வை ஒன்றிய அரசு கொண்டுள்ளது. நாங்கள் எதிர்ப்பு அரசியல் செய்யவில்லை. உரிமை அரசியல் செய்கிறோம். உரிமையை தர மறுப்பதால் குரல் எழுப்புகிறோம் என்றார்.