தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதில் ஒரு இடத்தை தருமாறு அதிமுக தலைமைக்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. தருவதாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மேலும் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. தேனி தொகுதியில் மட்டுமே ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் வெற்றி பெற்றார். இதனால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சியில் இருந்து வந்தனர்.  

இந்நிலையில் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது சட்டப்பேரவை பலத்தின் அடிப்படையில் அதிமுக மற்றும் திமுக தலா 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். ஏற்கனவே கூட்டணி ஒப்பந்தத்தின் படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக தர வாய்ப்புள்ளது.

 

எனவே அதிமுகவிடம் 2 இடங்களிலேயே இருக்கும் நிலையில், கூட்டணி கட்சியான பாஜக ஒரு இடத்தை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒரு எம்.பி. பதவியை பாஜகவுக்கு வழங்கினால் அதிமுக வசம் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியே மிஞ்சும். இதனால் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்களின் எண்ணிக்கை மேலும் குறைந்துவிடும். உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் பாஜகவுக்கு எம்.பி. பதவியை விட்டுக்கொடுப்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிமுக நிர்வாகிகள் கருதுகின்றனர்.