14 மாத குழந்தையான எங்களுக்கு மக்கள் வாக்குகளை வாரி வழங்கி விட்டனர் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நெகிழ்ந்துள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், "14 மாதங்களே ஆன இந்த குழந்தையை வாக்காளர்கள் வாரியணைத்து, ஓடவிட்டு பார்ப்பார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்த தேர்தலில், மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்காளர்கள் நேர்மையாக வாக்களித்து, எங்களிடம் வேறெந்த பிரதிபலனும் எதிர்பார்க்காத வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அடுத்து வரக்கூடிய சட்டசபை தேர்தலுக்கு ஒத்திகையாக அமைந்த இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தொடர்ந்து செயலாற்றுவோம். விவசாயம் கெட்டுப்போகாத திட்டங்களை மத்திய அரசு இங்கே கொண்டுவர வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு எதிரான கொள்கைகளை மக்கள் நீதி மய்யம் கொண்டதல்ல. தமிழகத்தில்தான் அமைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது. அதைத்தான் எதிர்க்கிறோம். விவசாயத்தை பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் நாங்கள் எதிராகதான் இருப்போம். பாரபட்சம் இல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு நன்மைகளை செய்ய வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டார்.

பிக்பாஸ் 3 மற்றும் இந்தியன் 2 திரைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன், "சினிமா என்னுடைய தொழில். அரசியல் எனது தொழில் அல்ல. அது என்னுடைய கடமை. பாஜகவின் ’பி’ டீம் யார் என்பதை நீங்கள் கண்டு பிடியுங்கள். நாங்கள் நேர்மையின் ஏ டீம்" என அவர் தெரிவித்தார்.