அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படுவது உறுதியாகிவரும் நிலையில், தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக மேலிட தலைவர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

அதிமுக-பாஜக கூட்டணிக்கு அதிமுகவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்தக் கூட்டணி உருவாவது உறுதியாகிவிட்டது. தற்போதைய நிலையில், தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணியை அறிவிக்கலாம் என இரு கட்சிகளும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டணி உறுதியாகிவிட்டதால், இந்த முறை தமிழகத்தில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என பாஜக மேலிடம் வியூகம் வகுத்துவருகிறது. கடந்த முறை வென்ற மாநிலங்களில் இந்த முறை பெரிய அளவில் வெற்றி கிடைக்காது என்பதால், இந்த முறை மேற்கு வங்காளம், ஒடிஷா, தமிழகம் போன்ற மாநிலங்களில் பாஜக சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.

அதற்கேற்ப தேசிய தலைவர்கள் தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. அடுத்தடுத்து தலைவர்கள் தமிழகம் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்கடி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி திருப்பூரில் நேற்று பிரசாரம் செய்துவிட்டு சென்ற நிலையில், 19-ம் தேதி கன்னியாகுமரியில் பிரசாரம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.    

இதேபோல உத்தரப்பிரதேச முதல்வர் 12-ம் தேதி உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் நெல்லை வருகிறார். ஆதித்யநாத்துக்கு தமிழக தென் மாவட்டங்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கொங்கு மண்டலத்தைக் கவனித்துவரும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 14-ந் தேதி ஈரோடு வருகிறார். அதன்பின் மீண்டும் 22-ம் தேதி அமித் ஷா ராமேஸ்வரம் வரவும் முடிவு செய்திருக்கிறார். மத்திய அமைச்சரும் முன்னாள் பாஜக தேசிய தலைவருமான நிதின் கட்காரி 15-ம் தேதி சென்னை வந்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பாஜக தலைவர்களின் தமிழக வந்துகொண்டிருப்பதால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் இன்னும் பிரசாரம் சூடுபிடிக்கும் என்று தமிழக பாஜகவினர் கூறுகிறார்கள்.