தன்னுடன் இருப்பவர்களை பழிவாங்காமல் நேரடியாக தன்னிடம் மோத வருமாறு சாதாரண மனிதனாக காத்திருப்பதாக திமுவிற்கு அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். 

காவல் துறை அதிகாரி மாற்றம்

திமுகவிற்கும் பாஜகவிற்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. திமுக அமைச்சர்கள் சவால் விடுப்பதும், அண்ணாமலை அதற்கு பதில் சவால் விடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்தநிலையில் பிரதமர் மோடி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை வந்த போது தமிழக அரசு பிரதமரை அவமதித்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். ஊழல் செய்யும் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்தநிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முந்தைய தினம் பாஜக நிர்வாகி ஒருவர் சிந்தாதரிப்பேட்டையில் கொல்லப்பட்டார். மேலும் கட்டுமான நிறுவனம் கொடுத்த புகாரில் ஜூனியர் விகடன் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதனால் சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. அவருக்கு பதிலாக சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரேம் சின்ஹாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த காரணங்களுக்காக சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் மாற்றப்பட்டதாக கூறப்பட்டாலும் மற்றொரு காரணமாக கண்ணன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக பிரதமர் மோடி சென்னைக்கு வந்த போது பாஜகவினர் அதிக அளவில் நேரு அரங்கிற்குள் அனுமதிக்க உதவி செய்ததாக கூறப்பட்டது.

பாஜக ஆதரவாளர் கைது

மேலும் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சிலைகளை கடந்த ஆண்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதாக கூறப்பட்டது. . இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை மாற்று மதத்தினர் தான் சேதப்படுத்தியதாக பாஜக மற்றும் இந்து அமைப்பினர் குற்றம்சாட்டியிருந்தனர். இந்தநிலையில் பாஜக ஆதரவாளரும் யூ டியூபருமான கார்த்தி கோபிநாத் என்பவர் யூடியூப் மூலம் சிறுவாச்சூர் கோவிலை சீரமைக்க போவதாக கூறி நிதி வசூல் செய்துள்ளார். இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் ஆவடி போலீசார் கார்த்தி கோபிநாத்தை ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக கூறி கைது செய்துள்ளனர்.

தனி மனிதனாக காத்திருக்கிறேன்

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேசியவாதி கார்த்திக் கோபிநாத்திற்கு தமிழக பாஜக துணை நிற்கும் என்று தெரிவித்தார். மேலும் கார்த்திக் கோபிநாத்திற்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அவரது தந்தையிடம் உறுதி அளித்துள்ளதாக அண்ணாமலை கூறியிருந்தார். இதனையடுத்து தற்போது அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், தென் சென்னை கூடுதல் கமிஷ்னர் கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பிரதமர் வருகையின் போது பாஸ்களை வழங்குவதில் தன்னுடன் நெருக்கமாக இருந்ததாக குற்றம்சாட்டுப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் யூடியூபர் கார்த்திக் கோபிநாத் என்னுடன் சில படங்கள் எடுத்ததால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது போன்ற அப்பாவிகளை பழிவாங்குவதை விட்டு விட்டு நேரடியாக தன்னிடம் வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். சாதாரண மனிதனாக தான் காத்திருப்பதாகவும் அண்ணாமலை அந்த டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.