குடியுரிமை சட்டத்தில் திமுகவின் பேச்சைக் கேட்டு மாணவர் சமுதாயம் தங்களை அழித்துகொள்ளக் கூடாது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “பிணம் தின்னி கழுகுகள் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதனுடைய பார்வை எப்போதும் பிணத்தின் மீதுதான் இருக்கும். இதற்கு சரியான எடுத்துக்காட்டாக திமுகவின் செயல்பாடு உள்ளது. தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஜாதி, மதம், மொழி ரீதியாகப் பிரித்து சூழ்ச்சி செய்து திமுக அதிகாரத்தில் அமர்ந்தது. திமுகவின் இந்தி எதிர்ப்பு என திமுக சொன்னதைக் கேட்டு மாணவர்கள் பலியானார்கள். அப்படி இறந்தவர்கள் குடும்பத்துக்கு திமுக எதுவும் செய்யவில்லை.


தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிற கட்சியான திமுக, இலங்கை தமிழர்களைப் பற்றி பேசும் அருகதையை 2009-ம் ஆண்டிலேயே இழந்துவிட்டது.இலங்கையில் 1.50 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட காரணமாக திமுகவும் காங்கிரசும் இருந்தன. இந்தப் பகல் வேடதாரிகளின் பேச்சைக் கேட்டு மாணவர் சமுதாயம் தங்களை அழித்துகொள்ளக் கூடாது. திமுகவின் வார்த்தைகளை நம்பி முஸ்லிம்கள் மயங்கிவிடக் கூடாது.” என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.