ரஜினி ஆரம்பிக்க உள்ள அரசியல் கட்சிக்கான பூர்வாங்க பணியாகவே அவருக்கு கோவா திரைப்பட விழாவில் உயரிய விருதை மத்திய அரசு வழங்க உள்ள நிலையில் பின்னணியில் பாஜக உள்ளதாக கூறப்படுகிறது.

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ஆண்டு தோறும் சிறப்பு விருதுகள் வழங்கப்படும். வழக்கமாக கேரளா, மேற்கு வங்கம், மராத்தி போன்ற மொழிகளை சேர்ந்த கலைஞர்கள் தான் இந்த விருதை தட்டிச் செல்வார்கள். ஆனால் இந்த முறை நடிகர் ரஜினிகாந்திற்கு குளோபல் ஐகான் எனும் விருது வழங்கப்பட உள்ளது.

தமிழ் திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வரும் ரஜினியை கௌரவிக்க இந்த விருது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. உண்மையில் ரஜினிக்கு இந்த விருது மிகப்பெரிய கவுரவம் தான். ஏனென்றால் கோவா சர்வதேச திரைப்பட விழா 50 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. அதிலும் பொன்விழா கொண்டாட்டத்தில் ரஜினிக்கு விருது கிடைப்பது கூடுதல் சிறப்பு.

உலகம் முழுவதும் இருந்து சினிமா தொடர்புடைய சுமார் 10 ஆயிரம் பேர் கோவா பட விழாவில் பங்கேற்பர். இப்படி ஒரு பிரமாண்ட விழாவில் ரஜினிக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்திய அளவில் ரஜினி மிகவும் பிரபலமான நடிகராக இருந்தாலும் கூட அவர் அரசியல் சார்புடையவர். அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் கூட ரஜினி ஒரு அரசியல்வாதியாகவே பார்க்கப்படுகிறார். இப்படிப்பட்ட சூழலில் ரஜினிக்கு விருது வழங்கியிருப்பது தமிழகத்தில் பலரின் ஆதரவை பெற்றுள்ளது.

வழக்கம் போல் சிலர் ரஜினிக்கு விருது கொடுத்திருப்பதை அரசியல் ஆக்குகின்றனர். உள்நோக்கத்தோடு ரஜினிக்கு பாஜக அரசு விருது கொடுத்திருப்பதாக முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அதே சமயம் கட்சிகளை கடந்து பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்ப்டடதன் மூலம் திடீரென மீண்டும் ரஜினி தமிழக அரசியல் களத்தின் பேசு பொருள் ஆகியுள்ளார்.

எப்படியும் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பித்துவிடுவார் என்கிறார்கள். அது வரை ரஜினி அரசியல் களத்தில் பரபரப்பாக இருக் வேண்டும் என்கிற திட்டத்துடன் இப்படி ஒரு விருது கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து இதே போன்று ரஜினியை மையமாக வைத்து அடுத்தடுத்து அரசியல் சம்பவங்களும் களைகட்டும் என்கிறார்கள். இது அனைத்தும் பாஜகவின் மேலிட ஆசிர்வாதத்தோடு நிகழும் என்றும் சொல்கிறார்கள்.