இந்தியாவின் 17 ஆவது நாடாளுமன்றத்துக்கு  வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் மெகா கூட்டணியை அமைத்துள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடது சாரிகள், விசிக உள்ளிடட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பாமகவுக்கு தருமபுரி, அரக்கோணம், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 தொகுதிகள் உறுதியாகியுள்ளன. மீதமுள்ள மூன்று  தொகுதிகள் விரைவில் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

இதனிடையே தேர்தல் பணிகளை பாமகவினர் தொடங்கிவிட்டனர். மாநில, மாவட்ட பொறுப்பாளர்களுடன் சட்டப்பேரவை தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை முழு வீச்சில் தொடங்கியுள்ள பாமக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறி வருகின்றனர். இந்நிலையில்  பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஒரு மத்திய அமைச்சர் பதவி தருவதாக அன்புமணியிடம் பாஜக உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பாமகவினர் தேர்தல் பணியை தீவிரமாக  செய்யத் தொடங்கியுள்ளனர்.