bjp planning to destroy all other parties

எதிரியை வெல்ல வேண்டுமானால், அவரை விட நாம் பலமாக இருக்க வேண்டும். அல்லது, எதிரியின் பலத்தை சிதைக்க வேண்டும். அதில் இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்துள்ளது பாஜக.

கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பலவீனமே, தற்போது, பாஜகவின் மிக பெரிய பலமாக உள்ளது.

மன்மோகன் சிங், சோனியா காந்தி, ப.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் மீது, வழக்குகள் பாய்வதும், ஏற்கனவே உள்ள வழக்குகள் விஸ்வரூபம் எடுப்பதும் அதற்கு சான்றாகும். 

பல இனங்கள், பல மொழிகள் பேசும் இந்தியாவுக்கு, மத சார்பற்ற காங்கிரஸ் ஆட்சியே சரியானது என்று சிந்தனையாளர்கள் கூறினாலும், ஊழல், லஞ்சம் போன்ற விஷயங்களுடன், அந்த ஆட்சியை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக ஆராய வேண்டிய கோப்புகள் காணாமல் போய்விட்டதாக, ஒரு அரசே வெளிப்படையாக சொன்னதையும் மக்கள் பார்த்து கொண்டுதானே இருந்தார்கள்.

2 ஜி போன்ற ஊழல் வழக்குகள், இந்தியா மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும் பேசப்பட்ட விஷயம் அல்லவா? மதசார்பற்ற ஆட்சி என்ற பெயரில், ஊழல் குற்றச்சாட்டுக்கு இலக்கான ஒரு ஆட்சியை புறக்கணிக்கவே மக்கள் விரும்பினார்கள்.

அதன் விளைவுதான், கடந்த தேர்தலில், மோடி தலைமையிலான பாஜகவை, கூட்டணி தயவே இல்லாமல், பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் மக்கள் அமரவைத்தனர். 

இப்போது, மோடி அரசு மீது மதவாத குற்றச்சாட்டையும், பொருளாதார வளர்ச்சி இல்லாத குற்றச்சாட்டையும் தவிர, வேறு எந்த குற்றச்சாட்டை, எதிர்க்கட்சிகள் முன் வைக்க முடியும்?

எதிர் கட்சிகள் எந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும், குற்றம் சாட்டும் தரப்பில் இருப்பவர்கள் மீதே, ஊழல் அல்லது லஞ்ச வழக்குகள் பாய்கின்றன. இதற்கு இடம் கொடுத்தது யாருடைய ஆட்சி?.

தேசிய அளவில், காங்கிரஸ் கட்சியோடு விட்டு விடாமல், மாநில அளவில், வலுவான கட்சிகளையும் கூட விடாமல் விரட்டி விரட்டி துரத்துகிறது பாஜக.

லஞ்சம், ஊழல், மோசடி என மடியில் நிறைந்த கனத்துடன் இருக்கும், பிராந்திய கட்சிகளும் கூட, பாஜகவின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.

ஹரியானாவில் ஓம் பிரகாஷ் சவுதாலா, பீகாரில் லாலு பிரசாத் யாதவ், தமிழகத்தில், மாறன் சகோதரர்கள், கனிமொழி, ராசா, சசிகலா, இளவரசி, சுதாகரன், தினகரன், பாஸ்கரன் என, வலுவான கட்சிகளில் வலிமையானவர்களாக திகழ்ந்த அனைவரும், சிறை பயத்தில், சித்ரவதை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். 

இது போதாதென்று, சேகர் ரெட்டியின் டைரி குறிப்பு, முன்னாள், இந்நாள் முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சாதி சங்க தலைவர்கள் என அனைவரையும் வழக்கு மற்றும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இந்த நிலையில், அசுர பலத்துடன், நினைத்ததை சாதிக்கும் வல்லமையுடன் களமிறங்கி உள்ள, பாஜகவை எதிர்த்து சிறைக்கு செல்வதா? அல்லது சரணடைந்து தப்பித்து கொள்வதா? என்பதுதான், தமிழகத்தில் உள்ள வலுவான கட்சிகள் தொடங்கி, உப்மா கட்சிகள் வரை அனைத்து கட்சிகளின் அடுத்த கட்ட விவாதமாக உள்ளது.

இவ்வாறு, பலத்துடன் வலம் வருபவர்களின் பலவீனத்தை வைத்தே, அவர்களை பலமிழக்க செய்யும், பாஜகவை துணிவோடு நின்று எதிர்ப்பதற்கு, தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் தலைவர்களே இல்லை. 

ஏனெனில் ஊழல், லஞ்சம், மோசடி போன்றவற்றால், அவர்களில் பலர் பலவீனப்பட்டு போய் பல காலம் ஆகிறது.

அதனால், பாஜக நினைத்தது போல், இந்தியா முழுவதும் பாஜக கொடியே பறக்கும். எதிர் கட்சிகள் அனைத்தும் தடயம் தெரியாமல் அழிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஊழல், லஞ்சம், மோசடி போன்ற எதற்கும் இலக்காகாத ஒரு துணிவுள்ள நல்ல தலைவர்கள் கிடைக்கும் வரை, பாஜக நினைத்தது நடக்கும். அதை தடுக்க யாராலும் முடியாது. 

ஏனெனில் அது பாஜகவின் பலம் அல்ல. மற்றவர்களின் பலவீனம்.