கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க இடம் பெற்றிருந்த கூட்டணியில் பா.ம.கவும் இருந்தது. இந்த கூட்டணியில் பா.ம.க தருமபுரியிலும், பா.ஜ.க கன்னியாகுமரியிலும் வெற்றி பெற்றன. ஆனால் தேர்தலுக்கு பிறகு பா.ம.கவை பா.ஜ.க கண்டு கொள்ளவில்லை. அன்புமணி எவ்வளவோ முயன்றும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற முடியவில்லை. இதனால் பல்வேறு விஷயங்களில் பா.ஜ.கவை பா.ம.க கடுமையாக எதிர்த்து வந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்க பா.ஜ.க வியூகம் வகுத்து வருகிறது. அ.தி.மு.க உடன் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது என்பதில் பா.ஜ.க தெளிவாக உள்ளது. எனவே கூட்டணியில் வேறு கட்சிகளையும் இணைக்க பா.ஜ.க மேலிடம் காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் பா.ம.க, தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிலும் பா.ம.கவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று அ.தி.மு.கவும் விரும்புகிறது. ஆனால் அ.தி.மு.கவுடன் கூட்டணி பேச பா.ம.க விரும்பவில்லை. கடந்த தேர்தலை போல தே.மு.தி.கவுடன் கூட்டணி பேசாமல் பா.ஜ.கவுடன் பேசி டீலிங்கை அன்புமணி இறுதி செய்தார். அதே போல் இந்த முறையும் நாம் பேசிக் கொள்ளலாம் அ.தி.மு.கவை பொருட்படுத்த வேண்டாம் என்று பா.ஜ.க அன்புமணிக்கு தகவல் அனுப்பியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நிச்சயமாக கேபினட்டில் இடம் வாங்கித் தருவதாகவும் சில வாக்குறுதிகள் பா.ஜ.க தரப்பில் இருந்து பா.ம.கவிற்கு பாஸ் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த தேர்தலின் போது பா.ஜ.க தரப்பில் அப்படி எந்த உறுதிமொழியும் தரவில்லை, எனவே நாங்களும் கேபினட்டில் இடம் தரவில்லை என்று பா.ஜ.க நிர்வாகிகள் அன்புமணியிடம் சமாதானம் பேசி வருகிறார்கள்.

ஆனால் அ.தி.மு.க இருக்கும் கூட்டணியில் பா.ம.க இடம்பெறுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை, தமிழக மக்கள் அ.தி.மு.க மீது அதிருப்தியில் உள்ளதாக கருதுகிறோம், எனவே அவர்களுடன் கூட்டணி வைக்க என்ன காரணம் இருக்கிறது? என்று பா.ம.க தரப்பில் யோசிப்பதாகவும், இதற்கு கடந்த தேர்தலில் எப்படி தே.மு.தி.கவுடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தீர்களோ, அதே போல் இந்த முறை அ.தி.மு.கவுடன் இருந்து கொள்ளுங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறதால் பா.ஜ.க மேலிடம்.

ஆனால் கூட்டணி தொடர்பாக பா.ம.க தரப்பிடம் இருந்து பா.ஜ.கவிடம் சாதகமான எவ்வித தகவலும் தற்போது வரை பாஸ் ஆகவில்லை. ஆனால் அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி இறுதிக்குள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்று மோடி, அமித் ஷா உத்தரவிட்டுள்ளதால், விரைவில் பா.ஜ.க தலைவர்கள் அன்புமணியை நேரில் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.