தமிழகத்தில் புதிய வாக்காளர்களை குறி வைத்து பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டு வருகிறது. 

தேசிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் பாஜகவுக்கென பெரிய இடம் இல்லை. திமுகவும் அதிமுகவும் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளாக உள்ளன. தமிழகத்தில் பாஜகவுக்கு இரண்டரை சதவீதம் மட்டுமே வாக்கு வங்கி உள்ளது என்பது கடந்த கால தேர்தல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. வலிமையான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடியும் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. 

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. அதேவேளையில் கட்சியை வளர்க்கவும் பாஜக ஆர்வம் காட்டி வருகிறது. தமிழகத்தில் பழைய தலைமுறை வாக்காளர்கள் பெரும்பாலும் திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதால், பழைய வாக்களார்களின் மனதை பாஜகவால் மாற்ற முடியவில்லை. எனவே புதிய தலைமுறை வாக்காளர்களைக் கவரும் உத்திகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. 

அண்மையில் தமிழக வாக்குச் சாவடி பொறுப்பாளர்களுடன் மோடி கலந்துரையாடும்போது அதை கோடிட்டு பேசினார். அரக்கோணம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் வாக்கச்சாவடி பொறுப்பாளர்களுடன் அண்மையில் மோடி பேசும்போது, “18 முதல் 20 வயது வரையுள்ள இளம் வாக்காளர்கள் முதன் முறையாக இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 

இந்த வயதுடையவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டால் தான் அவர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவார்கள். அவர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதும் பா.ஜ.க.வினர் வேலைதான். முதல் முறை வாக்களிக்க உள்ள புதிய வாக்களர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் வாக்குளை நாம் பெற முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது. பரம்பரை ஆட்சியை வெறுக்கும் அவர்கள் வளர்ச்சியின் மீது மட்டுமே அக்கறை கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வாக்குறுதிகளை ஏற்கமாட்டார்கள். ஆனால், செயல்பாட்டில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு வாய்ஜாலம், நாடகம் எல்லாம் பிடிக்காது. அரசு சிறப்பாக செயல்படுகிறதா என்று மட்டுமே பார்ப்பார்கள்.” என்று தெரிவித்தார்.

 

இதனையடுத்து 18 வயதாகும் புதிய வாக்களர்களைக் கவர பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு முடுக்கிவிடப்பட்டுள்ளது.  பாஜக பற்றியும் மோடியின் ஆட்சியைப் பற்றியும் சமூக ஊடங்கள் மூலம் தொடர்ந்து நேர்மறையாக கருத்துகளைப் பரப்பும் வேலையை இவர்கள் செய்து வருகிறார்கள். ‘போட்டோஷாப்’ என பாஜகவை எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் தீவிரமாக இயங்கி வருகிறது பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு. தேர்தல்வரை தீயாக வேலை செய்து தமிழகத்தில் புதிய தலைமுறை வாக்காளர்களைக் கவரும் உத்திகளை செயல்படுத்தவும் தீவிரம் காட்டிவருகிறார்கள்.