இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது, அதனால்தான் வாக்காளர்களை எதிர்கொள்ள அது அஞ்சுகிறது என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா திமுகவை  கடுமையாக விமர்சித்துள்ளார்.  எச். ராஜாவுக்கு திமுகவும் எப்போதும் ஏழாம் பொருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும்,  அந்த அளவிற்கு திமுகவை கடுமையாக விமர்சிப்பவர்களில் முதலாளாய் இருப்பவர் எச். ராஜா.  கட்சியை விமர்சிப்பதையும் தாண்டி திமுக தலைவர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையிலும் விமர்சிக்க கூடியவர் அவர். 

அப்படி பல விமர்சனங்களை முன்வைக்கும் அதே நேரத்தில் தனது இல்லத்தில் எந்த விசேஷம் நடந்தாலும் மறக்காமல்  முதலாளாய்  சென்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு  பத்திரிக்கை கொடுத்து வரவேற்கவும் எச். ராஜா மறப்பதில்லை,  தன் மீது அவர் வைத்த விமர்சனங்களையும் தாண்டி,  திமுக தலைவர் ஸ்டாலினும் தவறாமல் அவர் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரஸ்பரம் இருவரும் மரியாதை பாராட்டி வருகின்றனர்.  இப்படி  இருவருக்குமிடையே ஒருவிதமான எதிர்ப்பும் அரவணைப்பும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் எச். ராஜா வின் இளைய மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய ஸ்டாலின், அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்  என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால்,  அது ஒரு பக்கம் இருந்தாலும் தான் ஒரு அரசியல்வாதி என்பதை நிருபிக்கும் வகையில்  மீண்டும் திமுகவை சீண்டும் வகையில் கருத்து கூறியுள்ளார் எச். ராஜா. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு  விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனுக்கு எதிராக கடுமையாக டுவிட் போட்டவர்,  தற்போது திமுகவையும் விமர்சித்துள்ளார். அதில் ,  இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது,  அதனால்தான்  வாக்காளர்களை  எதிர்கொள்வதை தவிர்க்க விரும்புகிறது திமுக என்று தெரிவித்துள்ளார்.  ராஜாவின் இந்த கருத்துக்கு வழக்கம்போல திமுகவினர் தங்கள் எதிர்ப்பு கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.