உற்சாக மனநிலையில் பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டம்…டெல்லியில் இன்று மாலை கூடுகிறது…

பாரதீய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, இக்கூட்டத்தை தொடங்கிவைத்து பேசுகிறார்.

முன்னதாக இந்த செயற்குழுவின் நிகழ்ச்சி நிரல் குறித்தும், பொருளாதார, அரசியல் தீர்மானங்கள் பற்றியும் முடிவு எடுப்பதற்காக டெல்லி மாநகராட்சி கூட்ட அரங்கில் தேசிய நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள்.

உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பு  முடிவுகள் வந்திருப்பதால் பா.ஜ.க.வினர் உற்சாகமான மனநிலையில் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூடுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட், கருப்பு பணம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை மாலை 4 மணிக்கு, கூட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இதில் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர்கள், பா.ஜனதா ஆளும் மாநில முதல்-மந்திரிகள், முக்கிய தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என பொதுச்செயலாளர் அருண்சிங், செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா ஆகியோர் அறிவித்துள்ளனர்.