மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த தன் மனைவிக்கு பா.ஜ.க., எம்.பி. செளமித்ர கான் விவாகரத்து 'நோட்டீஸ்' அனுப்பி வைத்துள்ளார். 

ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க. எம்.பி. செளமித்ர கானின் மனைவி சுஜாதா மோண்டல் கான் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி நேற்று திரிணமுல் காங்கிரஸில் இணைந்தார். கட்சியின் மூத்த தலைவர் சவுகதா ராய் முன்னிலையில் அவர் இணைந்தார்.

அப்போது நிருபர்களிடம் சுஜாதா கூறுகையில், ‘’கணவர் நாடாளுமன்றத்திற்கு தேர்வாக வேண்டும் என்பதற்காக பல தியாகங்களை செய்தேன். எனினும் எனக்கு அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. என் அன்பிற்குரிய தலைவர் மம்தா பானர்ஜியின் கீழ் பணியாற்ற விரும்புகிறேன். புதிதாக சேர்ந்தவர்கள் தகுதியற்றோர் மற்றும் ஊழல் தலைவர்களுக்கு மட்டுமே பா.ஜ.க.,வில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதை உணர்ந்து என் கணவரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் வந்து இணைவார் என நம்புகிறேன்’’ எனத் தெரிவித்தார்.

 

இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் சுஜாதா மொண்டல் கானுக்கு அவரது கணவர் செளமித்ர கான் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்தார். இதுகுறித்து அவர், ‘’கணவன் மனைவியை பிரிக்க தயங்காத சிலர் என் மனைவி வாயிலாக அதை செய்து வருகின்றனர். இனி சுஜாதா என்னை கணவராக எங்கும் அடையாளம் படுத்தக்கூடாது. அவருக்கு முழு சுதந்திரம் அளிக்கிறேன். 10 ஆண்டு திருமண உறவு முடிவுக்கு வருகிறது’’ எனத் தெரிவித்தார்.