சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாகிவிட்டது பாஜகவின் நிலை. நடுத்தர மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என புதுச்சேரியில் பிரதமரிடம் கேள்வி கேட்ட இந்தி பேசும் நபரை வலைவீசி தேடி வருகின்றனர் பாஜக தொண்டர்கள். 

நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன்  நமோ செயலி மூலம் கலந்துரையாடி வருகிறார் பிரதமர் மோடி. அதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன், புதுச்சேரி மாநில பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது , பிரதமரிடம் பேசுகிறோம்... பாஜ கூட்டத்தின் நடுவில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டார் போல ஒரு இந்தி பேசும் நபர். மோடியை கேள்வி கணைகளால் கிழித்து தொங்க விட்டார். ‘வரி வசூலில்தான் அக்கறையா? மக்கள் நலனை பற்றி சிந்தியுங்கள்; நடுத்தர, ஏழை மக்கள் விஷயத்தில் என்ன செய்தீங்க?’ என கேள்வி கேட்க... ஒரு நிமிடம் பாஜவினர் இருந்த வீடியோ கான்பரன்சிங் அறையே நிசப்தமாக மாறிவிட்டது. பதில் சொல்ல வேண்டிய பிரதமரும் இந்த கேள்வியை சற்றும் எதிர் பார்க்காததால் ஒரு நொடி அதிர்ந்து போனார்.

இருப்பினும் உடனே சுதாரித்துக் கொண்டு, கேள்வி கேட்ட அந்த இந்தி ஆசாமியை பார்த்து, ‘கவலைப்படாதீங்க... அதை நாங்க பார்த்துக் கொள்வோம்..’  என்று கூறி, அந்த கேள்வியால் பாதிக்கப்படாதவராக, அடுத்த பக்கம் திரும்பி, வணக்கம் புதுச்சேரி எனக்கூறிவிட்டு எஸ்கேப்பாகிவிட்டார். கூட்டம் முடிந்ததும், கேள்வி கேட்ட அந்த வடமாநிலத்தவரை உள்ளூர் பாஜகவினர் வலைவீசி தேடிவருகின்றனர். ஆனால், அவர் பாஜகவினரிடம் சிக்காமல் வெளியேறியதுடன், யார் கண்ணிலும் படக்கூடாது என்று முடிவெடுத்த அவர், அடுத்த நாளே புதுச்சேரியை விட்டு சொந்த ஊருக்கு ரயில் ஏறிவிட்டதாக கூறுகிறார்கள்.

3 நியமன எம்எல்ஏக்களை போட்டும், இன்னமும் பாஜகவுக்கு வடமாநிலத்தவரை வைத்துதான் பிழைப்பு ஓட்ட வேண்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் போட்டு, பாஜகவை நெட்டிசன்கள் துவம்சம் செய்து வருகின்றனர்.