2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம், திரிபுரா போன்ற மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக அபார வெற்றி பெற்றது.

ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில்  பாஜக படு தோல்வி அடைந்தது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பிரச்சனைகளில் பாஜகவின் தோல்விதான் தேர்தலில் எதிரொலித்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் மே மாதம் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது, இதையடுத்து பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. கூட்டணி பேச்சு வார்த்தை போன்வற்றில் இக்கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில்  நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பை  டைம்ஸ் நவ் - விஎம்ஆர் வெளியிட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் எந்தக் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது

அதன்படி தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 இடங்களில் 36 இடங்களை திமுக - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் என்றும் அதிமுக கூட்டணி 4 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மற்ற தென்னிந்திய மாநிலங்களின் நிலையும் இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 17 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும், பாஜக கூட்டணி 1 இடத்திலும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கூட்டணி 10 இடங்களிலும்  மற்றவை 1 இடத்தில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.ஆந்திராவில்  25 இடங்களில் 23 இடங்களை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும்,  2 இடங்களை தெலுங்கு தேசம் கட்சியும் வெல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவைப் பொறுத்தவரை 20 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களையும்,  இடதுசாரிகள் 3 இடங்களையும், பாஜக கூட்டணி முதன் முறையாக ஒரு இடத்திலும் ஜெயிக்கும் என அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 28 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களையும்,  பாஜக கூட்டணி 14 இடங்களையும் வெல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை பாஜக படுதோல்வியைத் தழுவும் என தெரிகிறது.