கேரளாவில் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் பாஜக பின்தங்கியுள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம் மாநகராட்சியில் மட்டும் பாஜக 2வது இடத்தில் உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றுவோம் என அக்கட்சி தெரிவித்திருந்த நிலையில், பாஜக பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கேரளாவின் 941 கிராம ஊராட்சி, 152 ஊராட்சி ஒன்றியம், 14 மாவட்ட ஊராட்சி, 86 நகராட்சி, 6 மாநகராட்சி ஆகிய 1199 உள்ளாட்சி  அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குபதிவு கடந்த 8, 10, 14 ஆகிய  தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதில் சராசரியாக 77 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன இந்த வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள் டிசம்பர் 21ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள் என  மாநில தேர்தல் ஆணையர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிலையில் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் துவங்கியது. மொத்தம் 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது, காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதில் காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது. மாநகராட்சிகளில் இடது முன்னணி முன்னணி வகிப்பதாகவும், கிராமப் பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அதேநேரத்தில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களை பாஜக கைப்பற்றியிருந்த நிலையில், அது வெற்றி பெற்ற சில வார்டுகளில் தற்போது அக்கட்சி பின்னணியில் உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றுவோம் என்று பாஜக அறிவித்திருந்த நிலையில், எந்த மாநகராட்சியிலும் பாஜக இதுவரை முன்னிலையில் இல்லை. ஆனால், திருவனந்தபுரம் மாநகராட்சியில் மட்டும் பாஜக 2வது இடத்தில் உள்ளது. இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.