Asianet News TamilAsianet News Tamil

ஜனாதிபதி வேட்பாளர் யார்? 23-ந்தேதி அறிவிக்கிறது பா.ஜனதா...

BJP led NDA Presidential candidate to file nomination by June 23
BJP-led NDA Presidential candidate to file nomination by June 23
Author
First Published Jun 14, 2017, 6:38 PM IST


ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வரும் 23-ந்தேதி அறிவிக்கப்படலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பதவிக்காலம்

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 14-ந் தேதியும், குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ந் தேதியும் முடிகிறது.

இதையடுத்து புதிய குடியரசு தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கி வரும் 28-ந்தேதி வரையிலும் நடைபெறுகிது.

புதிய குழு

இதுவரை மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அது குறித்து முடிவு செய்ய மூத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, எம். வெங்கையா நாயுடு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியாக இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதலில் சந்தித்து பேச உள்ளனர். அதன்பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் சந்தித்து பேச உள்ளனர் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இது தொடர்பாக கடந்த 12-ந்தேதி நிதி அமைச்சர் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, வேட்பாளர் தேர்வில் கருத்து ஒற்றுமை ஏற்பட முயற்சித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை..

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்காக எதிர்க்கட்சிகள் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன் கூடி ஆலோசனை நடத்தி விட்டது. மேலும்,  மாநிலங்கள் அவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபிஆசாத்தையும் சந்தித்து பேசினர். 

23-ந்தேதி பா.ஜனதா வேட்பாளர் அறிவிப்பு?

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 23ந் தேதி அதன் வேட்பாளரை அறிவிக்கும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. பா.ஜனதா சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு நேற்று நடத்திய ஆலோசனைக்குப்பின் இந்த முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளர் முதலில் அறிவிக்கட்டும், அதன்பின் தங்களின் நிலைப்பாட்டை எடுக்கலாம் என எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் குலாம்நபிஆசாத், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ், திரிணாமுல்காங்கிரஸின் டேரிக் ஓ பிரையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் நேற்று இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். 

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் கருத்து ஒற்றுமை ஏற்படாத பட்சத்தில் இரு தரப்பும் தனித்தனியாக வேட்பாளரை அறிவிக்கும், ஜூலை 17-ந்தேதி தேர்தலும், 20-ந்தேதிவாக்கு எண்ணிக்கையும் நடக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios