’அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்’ என்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ட்விட் செய்துள்ளார்.

நீண்ட நாட்கள் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உத்தபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு  தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று சமமான பிரிவாக பிரித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தது.  இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன.

அந்த தீர்ப்பில், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் வழங்க வேண்டும். அந்த இடத்தை மூன்று மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரித்துக் கொடுத்தது தவறு. சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அமைப்பை 3 மாதங்களுக்கு உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவு வெளியான அடுத்த நிமிடமே தனது ட்விட்டர் பக்கத்தில்,...தனக்குக் கோயில் கட்டப்படுவதற்கு இப்படி ஒரு கிரீன் சிக்னலை எதிர்பார்த்துதான் ராமர் காத்திருந்தார். ஜெய் ஸ்ரீராம்...என்று பதிவிட்டுள்ளார். சுவாமியின் அப்பதிவுக்குக் கீழ்,... இந்து மத ஆதரவாளர்கள் பலரும் இப்படி ஒரு தீர்ப்பு கிடைக்க உங்கள் பங்களிப்பும் இருந்ததை இந்துக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள்.