புதுக்கோட்டையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினர். விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர், திருநாவுக்கரசர், பாஜக மாநில துணைத்தலைவர் அரச குமார் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மணமக்களை வாழ்த்திய அரச குமார் தாறுமாறாக ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். உள்ளாட்சியில் நல்லாட்சி தந்த தளபதி அவர்களே என்று அவர் பேச்சை தொடங்கியதுமே திமுகவினர் ஆரவாரம் செய்தனர். திமுகவிற்கு மட்டுமல்ல தமக்கும் ஸ்டாலின் தான் எப்போதும் நிரந்தர தலைவர் என்றார். எத்தனையோ முறை முதல்வர் பதவிக்கு அருகில் இருந்தும் அதை ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறிய அரசகுமார், அவர் நினைத்திருந்தால் ஒரே இரவில் கூவத்தூர் பிரச்சனையின் போதே முதல்வராகி இருக்க முடியும் என்றார்.

ஜனநாயக முறைப்படி முதல்வர் பதவியை அடைய ஸ்டாலின் காத்திருப்பதாகவும் அவர் எதிர்பார்க்கும் காலம் விரைவில் அமையும் என்றார். யார்யாரோ வருங்கால முதல்வரே என்று தங்களை அழைத்து கொள்வதால் அந்த வார்த்தையை ஸ்டாலினுக்கு தான் பயன்படுத்த விரும்பவில்லை என்ற அரசகுமார், திமுகவினர் எதிர்பார்ப்பதை போல ஸ்டாலின் அரியணை ஏறும் காலம் தொலைவில் இல்லை என பேசினார்.

திமுகவின் வெற்றிக்காக தான் பாடுபட்டதையெல்லாம் நினைவு படுத்தி பேசிய அவர், எப்போது வேண்டுமானாலும் திமுக வேட்டியை மீண்டும் கட்டுவேன் என்றார். மேலும் எம்.ஜி.ஆருக்கு பிறகு தான் ரசிக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான் என்று புகழ்ந்து தள்ளினார். பாஜக தலைவர் ஒருவரின் இந்த பேச்சு திமுக தொண்டர்களையே அசர வைத்துள்ளது.