ரஜினி பாஜகவில் சேர வேண்டும் என்பதே என் விருப்பம் என்று மத்திய முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அரசியலில் இறங்கப்போவதாகவும், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனது படையும் இருக்கும் என்று ரஜினி கடந்த 2017 டிசம்பர் 31 அன்று அறிவித்தார். ஆன்மீக அரசியலாக தனது அரசியல் பயணம் இருக்கும் என்று ரஜினி அறிவித்தது முதலே பாஜகவினரும் இந்துத்துவ அமைப்புகளும் ரஜினியை ஆதரித்துவருகிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் பாஜகவின் குரலாக ரஜினி ஒலித்துக்கொண்டிருப்பதாக தமிழக எதிர்க்கட்சிகள்  கூறிவருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக ரஜினியைச் சுற்றி அவ்வப்போது அரசியல் பேச்சுகள் சுழன்றுகொண்டிருக்கின்றன. ஆனால், ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்ற கருத்துகளும் அவ்வப்போது கூறப்பட்டுவருகின்றன. ஆனால், தேர்தலுக்கு முன்பாக கட்சியைத் தொடங்கி தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக ரஜினியைத் தீவிரமாக ஆதரிப்பவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால், ரஜினி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். இது குழப்பத்தை ஏற்படுத்திய வேளையில்,  “தேர்தலுக்கு முன்பாக கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவார். தமிழகம் முழுவதும் வலம் வருவார்” ரஜினியை மிகத் தீவிரமாக ஆதரிக்கும் தமிழருவி மணியன் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.
இந்நிலையில், ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்பதே என் விருப்பம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “ நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அதை நான் வரவேற்பேன். ஆனால், ரஜினி பாஜகவில் சேர வேண்டும் என்பதே என் விருப்பம். அவர் அறிவாளி. என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். அதே வேளையில் அவரை கட்சியில் இணைக்க பாஜக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை” என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


ரஜினியை எப்படியும் பாஜகவில் சேர்த்து தமிழகத்தில் அக்கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்று பாஜக தீவிரமாகவே முயற்சித்துவருகிறது. அகில இந்திய தலைவர்கள் முதல்  தமிழக தலைவர்கள் வரை பலரும் இதை அவ்வப்போது வெளிப்படுத்திகொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் அந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.