காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்தோடு, அந்த இலக்கை எட்டுவதை நோக்கி பாஜக செயல்பட்டு வருகிறது. 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. 

பாஜகவும் வேண்டாம்.. காங்கிரஸும் வேண்டாம்.. தேசிய அளவில் உருவாகும் மூன்றாம் அணியில் இடம்பெற ஆம் ஆத்மி தயாராக இருக்கிறது.

தேசிய அளவில் இரு முதன்மை கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் அள்ளி வீசிக்கொள்வதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. அந்த இரண்டு கட்சிகளையும் எதிர்த்து ஆம் ஆத்மி செயல்பட்டு வருகிறது.

இந்த கட்சிகளின் நிர்வாகிகளும் தங்களது கட்சிக்காக வரிந்து கட்டிக்கொண்டு, எதிர்க்கட்சிகளை வசைபாடுகின்றனர். அவ்வாறு வசைபாடுவதில் முதன்மையானவர்கள் என்றால், அந்த கட்சிகளின் செய்தித்தொடர்பாளர்கள் தான்.

தொலைக்காட்சி விவாதங்களிலும் பேட்டிகளிலும் எதிர்க்கட்சிகளை வசைபாடும் அவர்களை பார்க்கும் மக்கள், இவர்கள் இப்படி சண்டையிட்டுக் கொள்கின்றனரே என பார்ப்பர். அந்தந்த கட்சியை சேர்ந்தவர்களோ, தங்கள் கட்சி செய்தி தொடர்பாளரின் பேச்சையும் பதிலடியையும் வியந்து பார்ப்பர்.

இன்னும் பலர், அவர்கள் வெளியிலும் அப்படித்தான் இருப்பார்கள் என்று அப்பாவித்தனமாக நினைக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவர்கள் அப்படியெல்லாம் இல்லை. கேமராவுக்கு முன்னால் மட்டும்தான் நாங்கள் அப்படி என்பதை நிரூபிக்கும் விதமாக போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.

பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆல்கா லம்பா. இவர்கள் மூவருமே அவரவர்கள் சார்ந்த கட்சிக்கு ஆதரவு அளித்து எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்வர். 

அரசியல் ரீதியாக அடித்துக்கொள்ளும் இவர்கள் மூவரும், கத்தார் நாட்டில் கத்தாரா கடற்கரையில் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக சுற்றிவரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. கத்தாருக்கு சென்றுள்ள அவர்கள், கடற்கரையில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டுள்ளனர். தொலைக்காட்சிகளில் இவர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதை கண்ட பலரும் இந்த புகைப்படங்களை கண்டு, அதிர்ச்சியடைகின்றனர்.

இதுதான் அரசியல் என்பதை புரிந்துகொண்டால் சரி..