பக்தர்கள் அனைவரும் நாளை மாலை வீடுகள் தோறும் வேல் அல்லது முருகன் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மூலம் அவதூறு செய்த விவகாரம் பூதாகரமாகியது. இந்த விவகாரத்தை பாஜகவும் இந்து அமைப்புகளும் கையில் எடுத்து போராட்டத்தில் குதித்தன. இதனையடுத்து கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் பாஜகவும் பல்வேறுவிதமான போராட்டங்களையும் வேண்டுதல் நிகழ்வுகளையும் நடத்திவருகிறது. அந்த வகையில் வீடுகள் தோறும் வேல் பூஜையை தமிழகம் முழுவதும் நாளை பாஜக நடத்துகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிக்கை விடுத்து அழைப்பு விடுத்துள்ளார். அதில், “கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் , தமிழ்க் கடவுள் முருகனை , முருகனை வேண்டிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மன வேதனையில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மீக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, நாளை (09-08-20) மாலை சரியாக 6.01 மணிக்கு, பக்தர்கள் அனைவரும் வீடுகள் தோறும் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வினை உலகிற்கு காட்டுவோம்.” என்று அறிக்கையில் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.