அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்த பாஜக இப்போது தேர்தலுக்காக அதே கட்சியுடன் கூட்டணிக்கு காத்திருப்பது ஏன்? என அதிமுக எம்.பி.,யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை பட்டாசை கொளுத்திப் போட்டிருக்கிறார். 

பாஜகவுடன், அதிமுக கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தம்பிதுரை, மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை தம்பிதுரை விமர்சிப்பது அவரது சொந்தக் கருத்து என அதிமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுகவும் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், இந்தக் கூட்டணிக்குப் முட்டுக்கட்டை போடுவதை போல தம்பிதுரை தொடர்ச்சியாக தாறுமாறாய் கருத்து தெரிவித்து தாக்குதல் நடத்தி வருகிறார்.

 

இந்நிலையில், திருவாரூர், குடவாசல் அருகே திருப்பாம்புரத்தில் செய்தியாளர்களை சந்திந்த அவர், ’’ அதிமுக.,வுடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா விருப்பம் காட்டுவதாக அமைச்சர் உதயகுமார் கூறி இருக்கிறார். அதுபற்றி கட்சி தலைமை சரியான முடிவு எடுக்கும். கூட்டணி பற்றி முதல்வரும், துணை முதல்வரும் நல்ல முடிவு எடுப்பார்கள்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு பேட்டியின்போது, ஒரு கட்சியை நாக பாம்பின் வி‌ஷத்துடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். எங்கள் கட்சியான அதிமுகவை ஊழல் கட்சி எனக் கூறினார். இந்த நிலையில் பாஜக அதிமுகவுடன் கூட்டணிக்கு தாமக முன் வருகிறது. ஊழல் கட்சி என விமர்சித்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைப்பது தகுமா? ஆகையால் பா.ஜனதா, எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளது என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.

கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு வரும் என்று சொல்வது வேடிக்கையான ஒன்று. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். எங்கள் கட்சி மத்திய அரசை தீர்மானிக்கும் கட்சியாக இருக்கும்’’ என அவர் தெரிவித்தார்.